ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதமர் சின்சே அபேயிடம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதமர், இலங்கை ஜனாதிபதிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகளின் மனித உரிமை பொறிமுறைகளுடன், குறிப்பாக மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளதையும் புதிய மனித உரிமை ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அது தயாராகயுள்ளதையும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவரிற்க்கு அழைப்பு விடுத்துள்ளதையும் ஜப்பானிய பிரதமர் பாராட்டினார்.
பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவை இந்த மாதம் இலங்கை அதிகாரிகள் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளதையும் பொருத்தமான தருணத்தில் இலங்கைக்கு அழைக்கவுள்ளதையும் அவர் வரவேற்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபகச தனது அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனும் ஐ.நாவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டுள்ளதை வலியுறுத்தினார்.
நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டிய ஜப்பான் தலைவர் சம்பந்தப்பட்ட சகலதரப்பினர் மத்தியிலும் பேச்சுக்கள் இடம்பெற வேண்டியது நல்லிணக்கத்திற்கு அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.
வடபகுதியில் தேர்தல்களை நடத்தியமை, சாட்சியங்களை பாதுகாப்பதற்கான சட்டமூலம், காணமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஆணை விஸ்தரிக்கப்பட்டது போன்றவற்றையும் ஜப்பானிய பிரதமர் வரவேற்றார் .ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறும் ஜப்பானின் முயற்சிக்கான இலங்கையின் ஆதரவிற்க்கு நன்றி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் சகல வகையான பயங்கரவாத செயல்களையும் கண்டித்தனர். அதற்கு எதிரான போராட்டத்தில் உறுதியான சர்வதேச ஒத்துழைப்பை அவர்கள் வலியுறுத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















