இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் 3வது நாள் அமர்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, வவுனியாவில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பேராளர்கள் ஊர்வலமாக நகரசபை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமை உரையினை ஆற்றினார். அவரது நீண்ட உரை பின்வருமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 “மே” 25ஆம் நாள் வவுனியாவில் நடைபெற்றதன் பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 “மார்கழி” 18லிருந்து 64 ஆண்டுகள் நிறைவில் 15வது மகாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி பெருநிலப்பரப்பில் நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதே போல எம் தமிழ் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.
தந்தை செல்வாவின் சுவடுகளிலிருந்து 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பொழுதும், வன்னி நிலப்பரப்பை ஆண்ட பரம்பரை ஆட்சியை நிலைநாட்ட 200ஆண்டுகளுக்கு மேலாக 1811வரை ஐரோப்பிய ஆதிக்கத்திற்கெதிராக, ஆங்கில ஆட்சிக்கெதிராக வீரத்துடன் போராடிய கைலை மன்னனும், பண்டார வன்னியனும் வாழ்ந்து அரசோச்சிய வீரமறவர் போராடிய மண்ணில் அடங்காப்பற்று அந்தச் சுதந்திர தாகங்கொண்ட வன்னி நிலப்பரப்பில் தமிழரசு மாநாடு நடைபெறுகிறது. கற்சிலை மடுவுக்குப்பின் “முள்ளிவாய்க்கால்” வரை சிங்கள பேரினவாதத்திற்கு, மேலாதிக்கத்திற்கு எதிராக போராடி வீரத்தின் விளை நிலமாகவும் விடுதலைக்கு இலட்ச இலட்சமாய் இலட்சியத்திற்கு உயிர் கொடுத்த வீரமண் அந்த ஆத்மாக்களின் ஆன்ம ஓலம் ஒலித்துக் கொண்டும் எம்பொறுப்பை கடமையை உணர்த்திக் கொண்டும் நிற்கும் சிவந்த தமிழ் நிலத்திலிருந்து இம் மாநாட்டை நடத்துகிறோம். 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களம் ஆட்சி மொழிச் சட்டம் பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராக காலிமுகத்திடலிலே தந்தை செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின் “திருமலைக்குச் செல்வோம் சிறுமை அடிமை வெல்லுவோம்” என்று 1956 ஆகஸ்ட் 17ம் திகதி திருமலை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிலே எடுக்கப்பட்ட தீர்மானம் “1957ஆம் ஆண்டு ஆவணி 20ம் திகதிக்கிடையில் பிரதம மந்திரியும் அரசும் இலங்கையில் சமஷ்டி அரசமைப்பில் தமிழர் தேசத்தில் தன்னாட்சியை நிறுவும் நடவடிக்கையை எடுக்கத்தவறின் அவ்விலட்சியத்தை அடைவதற்குச் சாத்வீக வழியில் கட்சி நேரடி நடவடிக்கையில் இறங்கும்” எனும் போராட்டத் தீர்மானம் அறிவித்தபின் 1957 – 07 – 26ல் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஓரளவு சுயாட்சி, நிலவுரிமை நிலைநாட்டப்பட்டது. 1958 ஏப்ரல் 08ந் திகதி அந்த ஒப்பந்தம் ரத்துச் செய்வதாகப் பண்டாரநாயக்க அறிவித்தார். அதற்குப் பின்தான் 1958”மே” மாதத்தில் 25ஆம் நாள் வவுனியாவில், இந்த வன்னி நிலப்பரப்பிலே அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு போல் இம்மாநாடும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே. இந்த மாநாட்டிலே எடுக்கப்படும் தீர்மானம் இலட்சிய தாகத்தால் முன்னெடுக்கும் போராட்ட அறிவிப்பு முன்வைக்கப்படுமென்பதும் முக்கியமானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன். அந்த பொறுப்பைக் கையேற்பதற்காகத் தான் நான் உங்களால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை ஏற்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வன்னி நிலப்பரப்பில் மேற்கே 5000 ஆண்டு வரலாற்றைப் பிரதிபலித்து ஐந்து ஈஸ்வரங்களில் முக்கியமான திருக்கேதீஸ்வரமும், பாலாவி ஆறும் அமைந்துள்ளதும் வரலாற்றை ஆராய்ந்துள்ள அறிஞர்கள் இந்துமாக்கடல் வங்களாவிரிகுடா உருவாகுவதற்கு காரணமாய் இருந்தபிரளயம் வருவதற்கு முன் பொதிகையில் பிறந்த தாமிரபரணி ஆறு பாலாவி வரை பெருகியிருந்ததெனக் கூறியுள்ளனர். இன்று தமிழகக் கடலோரத்தில் அதே தாமிரபரணி வீழ்ந்து வருகிறது. நாம் கடலால் பிரிக்கப்பட்டுள்ளோம். அதேபோல நாம் சிங்களத்திலிருந்து மனதால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். விடுதலைக்காய் போராட விதி கொண்டிருக்கிறோம். மன்னார்க் கடல் எங்கள் நிலத்தின் எல்லையோரத்தில் ஆழமற்றதும் மட்திடல்கள் தெரிவதுமாய் புதிய சூழ்நிலைகளில் முத்து முதல் எண்ணெய் வரை கடல் வளமும் வேளாண்மை வளம் முதல் பல வளங்கள் கொழிக்கும் பிரதேசம். அத்தோடு மடுமதா திருக்கோவில் உருவாகி மறைமாவட்டமாய் விளங்குகிறது. அந்த பூமியிலே ரோமபுரியிலிருந்து பாப்பரசர் 2015 தைத்திங்களிலே காலடிவைக்கும் பரவசம் மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் ஆன்மம் பூரிக்கும், விடுதலைத் தாகமிக்க எம்மக்களின் இதயத்திற்கு ஆறுதலும் எதிர்காலமும் உண்டென்று நம்பிக்கையும் கொடுக்கும் மறைநிலப்பரப்பாயும் விளங்குகிறது.
மன்னார் கடலில் முத்தெடுக்க மச்சான் மண்டைக்கயிறு பிடித்து வாழ்வும் வளமும் சிறந்த அந்த ஆழியை அடுத்து ஏர்பிடிக்கும் வேளாண்மையும் விளைச்சலும் நிறைந்து எதிர்காலம் வளமாய் விளங்கும், உழைப்போர் பெருநிலப்பரப்பாய் திகழும் கிழக்கே, வவுனியா நகரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது சிறப்பானதேயாகும். தமிழர் வீரத்தின் விளைநிலமாய் கற்சிலைமடுவும் பனங்காமமும் பின் முள்ளிவாய்க்காலும் தியாகத்தின் சுவடுகளும் அதன் பின்னனியில் வற்றாப்பளை அம்மன் திருவருளும் கூடிய முல்லை நிலத்தின் பல துறை வளமும் இணைந்திருக்கும் வன்னி நிலப்பரப்பிலே “மீண்டும் போராடுவோம்” என்று எழுச்சி மிகு தீர்மானத்தை எடுப்பது தீர்க்கமாய் பொருத்தமாய் இருக்கிறது. சர்வதேச இராஜதந்திர சந்தர்ப்பமும், குறிப்பாக இந்தியாவின் புதிய அரசின் சந்தர்ப்பமும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் பயனுள்ள உழைப்பும் கைகூடியுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பற்றி நின்று இம்மாநாட்டில் பொருத்தமான இலக்கை எய்துவதற்கான இலட்சியம் நிறைந்த தீர்மானங்களை எடுப்போம் என அழைப்பு விடுக்கின்றேன்.
தந்தை செல்வநாயகத்தின் சுவட்டிலிருந்து “அமிர் அண்ணண்”, தளபதி அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திலே 12ஆவது தமிழரசு மாநாட்டிலே “இத்தாலியின் கரிபால்டி அழைத்ததுபோல் இளைஞர் சமுதாயத்தை போராட்டத்திற்கு அழைக்கிறேன்” என்ற தலைவனின் பாசறையிலிருந்தும், தமிழர் நிலம் எங்கணும் சிங்களச் சிறைகள் பலவும் என் வியர்வையும் இரத்தமும் சிந்தி உயிரே போய்விட்டதென்று தூக்கி வீசப்பட்டு உயிர் மீண்ட சந்தர்ப்பங்களினதும் அனுபவங்களினதும் ஒரு தொண்டனாக பக்குவம் பெற்ற சமான்யனை, என்னை இன்று எம் தேசத்தின் தலைவராக விளங்கும் திரு. சம்பந்தன் அவர்களும், வடக்கு மாநிலத்தின் முதல்வர் நீதியரசரும் எம்கட்சிக் குழாத்தினரும் தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் எட்டாவது தலைமைப் பொறுப்புக்கு தொண்டனாக விளங்கும் என்னைத் தெரிவு செய்தமைக்காக எமது கட்சியின் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்திய தேசியக் காங்கிரஸ் நடவடிக்கைளில் தலையிடாது அஹிம்சைப் போரை நடத்திவந்த மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட அறிவித்த பொழுது ஆபத்து வந்துவிடப்போகிறதென்று எண்ணிக்கொண்டு சீதாராம சாஸ்திரியை போட்டிக்கு நிறுத்துகிறார்.
ஆனால் தேசிய காங்கிரஸின் தலைவராக சந்திரபோஸ் வெற்றி பெறுகிறார். தலைமையுரையிலே “என் தேசத்தின் தந்தை மகாத்மாவே” என்று அழைத்துப் பேசுகிறார். ஹனோயிலிருந்து படைகளை வழிநடத்திப் புறப்பட்ட பொழுதும், அவ்வாறே காந்தியை அழைத்து வீரமுடன் இந்திய நாட்டை நோக்கி நடைபோட்டார். அந்த பாரம்பரியமும் பண்பும் தொண்டனுக்கும் போராளிக்கும் தளபதிக்கும் தலைவனுக்கும் இருக்கவேண்டும். பெருந்தலைவனாகவோ, தளபதியாகவோ இல்லாது விட்டாலும் ஒரு நல்ல தொண்டனாக நின்று இப்பாரம்பரியத்தை, பண்பாடுகளைப் பின்தொடர்ந்து இந்த உயரிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் எமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஆழப்பதிந்திருக்கிறது. இந்தப் பணிக்காகவே தொண்டுக்காகவே ஜனநாயக விழுமியங்களையும் அறவழிக் கோட்பாடுகளையும் நிலைநிறுத்தி தமிழ்ப் பேசும் மக்களின் தமிழ் முஸ்லீம் மக்களின் விடுதலைக்கும் விடிவுக்குமான போராட்டத்தில் அனைத்து மக்களினதும் அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திரத்திற்காக ஜனநாயகத்திற்காகப் போராடுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டுப் பெருமைப்படுகிறேன்.
தந்தை செல்வநாயகம் 1949 மார்கழி 18ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்று முக்கியம் மிக்க தலைமையுரையை நிகழ்த்தினார். 1951ல் திருமலை மாநாட்டிலே தலைமை உரை நிகழ்த்தினார். தமிழினத்தின் முஸ்லீம் மக்களின் அடிமைத்தழையை அறுத்து சமஷ்டி அரசியற் கோட்பாட்டில் தமிழ் முஸ்லீம்களின் தன்னாட்சி அரசுகளை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைநாட்டும் கொள்கைத் திட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தான் கடந்த காலங்களிலும் எதிர்காலத்திலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு அரசியலமைப்புத் திட்டம் உருவாகினால் அதன் அடிப்படையாகவே இருக்கும் என்பதில் அறுதியாக இருக்கிறோம். இலங்கையில் தமிழன் வரலாறு 1920களிலிருந்தே கண்டியத் தலைவர்களும் கண்டிய சம்மேளனமும் இலங்கைப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக சமஷ்டி அரசியல் திட்டமொன்றை டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தனர்.
அத்திட்டத்தின் முக்கிய அம்சமாக:- 1. வடக்கு கிழக்கு ஒரு மாநில ஆட்சி நிர்வாகம் 2. கண்டி ஒரு மாநில ஆட்சி நிர்வாகம் 3. தாழ் நில தெற்குப் பிரதேசம் ஒரு ஆட்சி நிர்வாக மாநிலம் என்றும் ஒன்றிலொன்று ஆதிக்கம் செலுத்தாமலும் இம் மூன்று மாநில ஆட்சிகளும் சேர்ந்து மத்தியில் ஒரு கூட்டாட்சியை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்தனர். எஸ் டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களும் இதே எண்ணத்தையே கொண்டிருந்தார். இத் திட்டத்தை ஆதரித்து “மோர்னிங் ஸ்டார்” என்ற ஏட்டில் 1920களில் தொடர்ச்சியாக நான்கு கட்டுரைகளை வரைந்தார். ஆனால் பிரித்தானிய அரசு இத் திட்டத்தை ஏற்கவில்லை. அக் காலகட்டத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக ஐரிஸ் மக்கள் ஜரிஸ் விடுதலைக்காகப் போராடி வந்தனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஐரிஸ் விடுதலைப் போராட்டம் 20ஆம் நூற்றாண்டு வரை 1000 ஆண்டுகளாக நீடித்த பின் வெள்ளிக்கிழமை உடன்படிக்கையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1948ல் இலங்கைக் குடியரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் 1948 டிசம்பரில் இந்திய பாகிஸ்தானியர் குடியுரிமை சட்டத்திற்கான பிரேரணை வந்த பொழுது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால், தமிழ் காங்கிரஸிலிருந்து தந்தை செல்வா வெளியேறினார். 1949 மார்கழி 18ஆம் நாள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வைத்து மாநாட்டின் தலைமை உரையாற்றிய தந்தை செல்வநாயகம் அவர்கள் “இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்கள் விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்க வேண்டும் எனும் தனி நோக்கத்துடன் நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இப்போதிருக்கும் நிலையில் யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது என்பது எமது திடமான நம்பிக்கையாகும்”என்று கூறினார். அதனை வரைவிலக்கணப்படுத்திய போது, “யாம் கோருவது இதுதான்”, “ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஷ்டி அரசு இலங்கையில் ஏற்படவேண்டும்”; என விளக்கமளித்தார்.
1972ல் தமிழ் மக்களுக்குரித்தான இறைமையை ஜனநாயக அடிப்படை உரிமைகளை நிராகரித்து சிறிமாவோ தலைமையிலான கூட்டமைப்பு முன்னரிலும் பார்க்க வலுவும் கடுமையும் மிக்கதான ஒற்றையாட்சி அரசியலமைப்பைப் பிரகடனப்படுத்திய சந்தர்ப்பத்தினாலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டி ஏற்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசின் புதிய அரசியலமைப்பை எதிர்த்து இளைஞர்களின் போராட்டங்கள் தமிழர் பிரதேசமெங்கும் பரவியிருந்தது. 1973 மார்ச் 9ம் நாள் நாமெல்லாம் சிங்கள அரசினால் சிறையிலடைக்கப்பட்டோம். இரண்டரை ஆண்டுகளின் பின் விடுதலை செய்யப்பட்ட போதும் மீண்டும் சில நாட்களில் நாம் கைது செய்யப்பட்டோம். 11 தடவைகள் கைது செய்யப்பட்டு மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறையிருந்த பாக்கியம் பெற்றேன். 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களிடம் விநியோகித்துப் பிரசாரப்படுத்தினார்கள் என்பதற்காக திருவாளர்கள் அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரத்தினம், கா.பொ.இரத்தினம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 70அண்டுகள் சிறை, சொத்துப் பறிமுதல் என்றெல்லாம் அறிவித்து சிறப்பு நீதிமன்றம் நிறுவி வழக்கு நடத்தப்பட்டது. தந்தை செல்வநாயகம் தலைமையிலே, ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், புள்ளேநாயகம் முதலான அறுபத்தேழு வழக்கறிஞர்கள் அந்த வழக்கிலே தமிழினத்தின் சார்பில் வாதாடியிருந்தார்கள்.
முதலாவதாக அவசாரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை செல்லுபடியாகாது எனத் நீதிமன்றம் தீர்மானித்தது. கைது செய்யப்பட்டோர், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக 1977 ஏப்ரல் 13ல் சிறையிலிருந்து நானும் ஏனைய இளைஞர்களும் மீள வாய்ப்பு ஏற்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் சுதந்திர தமிழீழம் நிறுவ ஆணை வழங்கப்பட்டது. அது வல்ல தற்போது எடுத்துச் சொல்கின்ற பொருள், அந்தச் சிறப்பு நீதிமன்றத்திலே சட்டபூர்வமான, தமிழர் இறைமை தொடர்பான வரலாற்று அடிப்படையான விவாதங்களை திரு. மு. திருச்செல்வம் குழாத்தினர், அரசியலமைப்பு வல்லாளர் குழாம் முன்னெடுத்து வாதாடினர். அதில் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட வேண்டும் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.
(அ) இறைமை மக்கள் பிறப்புரிமை. அது எப்பொழுதும் மக்களிடமே இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கையின் எந்தவொரு அரசியலமைப்புக்கோ, ஆட்சிக்கோ தங்கள் சம்மதத்தைக் கொடுத்திருக்கவில்லை என்பதுதான். (ஆ) “ஐரோப்பியர் போரிலே பறித்த சுதந்திரம், ஆங்கில அரசினால் 1948ல் இலங்கைக்கு மீள அளித்த பொழுது, தமிழ் மக்களின் சுதந்திரம் தமிழ் மக்களிடமே திரும்பிவிட்டது” என்று வாதிடப்பட்டது. நீண்ட நாட்கள் நடந்த அந்த வழக்கில் மூவர் கொண்ட அந்தச் சிறப்பு நீதிமன்றம் “இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சாசனம் பற்றிய உங்கள் விவாதங்களைக் கேட்டோம். ஆனால் இந்த சிறப்பு நீதிமன்றத்திற்குத் தீர்ப்பு வழங்கும் சட்ட வரம்பு, அதிகாரம் இல்லை என்று வழக்கை நிறுத்திக் கொண்டது. ஆனால் அரசு உச்சநீதிமன்றில் அந்த வழக்கைத் தாக்கல் செய்தது. சில மாதங்களில் அரசு அந்த வழக்கைத் திருப்பி பெற்றுக்கொண்டது. இப்பொழுது ஏன் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிலையை எடுத்துக் கூறுகிறேன் என்றால் தமிழ் மக்கள், தமிழர்களின் இறைமையை எந்த அரசுக்கோ, ஆட்சிக்கோ கையளிக்கவில்லை என்பதுதான்.
மக்கள் எப்பொழுது ஒரு அரசுக்குத் தம் இறைமையை வழங்கச் சம்மதிக்கிறார்களோ அப்பொழுதுதான் அந்த அரசு இறைமையுள்ள அரசாக மாறுகிறது. கனடா சமஷ்டி நீதிமன்றத் தீர்ப்பு இத் தத்துவங்களின் பின்னணியிலிருந்துதான் கனடா நாட்டில் “கியூபெக்”; மக்களின் அரசியல் வேட்கைக்குத் தீர்வு காண்பதற்கு உள்ளக சுயநிர்ணய உரிமை “வெளியக சுயநிர்ணய உரிமை” எனும் பதங்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தன எனலாம். இலங்கை இனப்பிரச்சினையிலும் 2003ல் ஒஸ்லோ உடன்படிக்கையில் மேற்குறித்த தத்துவங்களும் பிரயோகிக்கப்பட்ட கொள்கை அடிப்படைகள் முன் வைக்கப்பட்டன. தீர்வுத் திட்டங்கள் தந்தை செல்வா காலத்திலேயே 1972ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க, மக்கள் ஆணை பெற்றதாகக் கூறிய சிறிமாவோ தலைமையிலான பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றி அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்த பொழுது அந்த சபையிலே “ ஒரு சமஷ்டி அரசியல் திட்டத்தை” தமிழரசுக் கட்சி முன்வைத்தமையை நினைவூட்டுகின்றேன்.
தந்தை செல்வா காலத்திலே தான் 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுயநிர்ணயத் தத்துவத்தின் இரு எல்லையையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அடுத்து இந்திய ஆட்சியின் தலையீட்டின் பின் 1985 காலப்பகுதியில் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் அப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்ட அமைப்பினரின் சம்மதத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் 1985 “டிசம்பர்” முதலாம் திகதி இந்திய அரசிடம் கையளித்த அரசியல் திட்டம் முக்கியம் பெற்றது. அத்திட்டமும் ஒரு இணைப்பாட்சி மற்றும் தன்னாட்சித் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்தது. அதற்குப் பதிலளித்த ஜே. ஆர்.அரசு அத்திட்டத்தை ஏற்றல் “தமிழீழத்தை அடைந்ததற்குச் சமன்” என ஆவணம் கொடுத்தது அந்த பிரேரணையின் மூலம் இலங்கை அரசியலமைப்பு இலங்கையானது“ஒரு கூட்டாட்சி அரசுகளின் ஒன்றியமாக இருக்கும்” என்ற மகுடத்துடன் தயாரிக்கப்பட்டு ஆவணமாக உள்ளது.
இந்தப் பின்னனியிற்றான் இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் வழிகாட்டலில் அரசும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் (பீரிஸ் – நீலன் திட்டம்) தயாரித்தளித்த அரசியல் தீர்வுத்திட்டம் “ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலீடாக, “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்ற அடிப்படையில் பொதுப் பட்டியலில்லாமல், தெளிவான மத்திய பிராந்தியங்களுக்கான அதிகாரப் பகிர்வுடன் ஒரு அரசியல் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அவ் அடிப்படைத்திட்டம் ஏற்க்கப்பட்டிருந்தால் ஒரு சம~;டித் தத்துவத்தினால் தான் அரசியலமைப்பு உருவாகயிருந்திருக்க முடியும். நாம் முன்வைத்த திட்டமும் அணுகல் முறையும் 2011 மார்ச் 18ந் திகதி ஜனாதிபதி ராஜபக்ச குழுவினரிடம் முன் வைத்த எம்மால் முன் வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் தெளிவான திடமான ஆவணத்திலும் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஒருவார்த்தைகூட இருக்கவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். இதனை இராஜதந்திர வட்டாரங்களும் சர்வதேசமும் நன்கு அறியும். மத்தி அரசுக்குச் செல்ல வேண்டிய 13 விடயங்களும் தன்னாட்சி மாநிலத்திற்கு தேவையான 51 விடயங்களும், தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. 2011 தை 10ம் நாள் ஜனாதிபதி ராஜபக்ச அரசுப் பிரதிநிதி குழு நிமால் சிறிபால டி. சில்வா, பீரிஸ் குழுவிற்கும் திரு.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்குமிடையிலான பேச்சு மேசையில் 2011 மார்ச் 18ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன் வைத்த தீர்வுத் திட்டத்திற்கான அடிப்படைத் திட்டம்.
இத் திட்டம் சர்வதேச இராஜதந்தரிகளுக்கும் நன்கு தெரியும் ஒவ்வொரு திங்களிலும் 20க்குக் குறையாத முக்கிய இராஜதந்திரிகள், தூதுவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை பற்றி ஆராய்ந்தனர். ஓராண்டு எம் திட்டத்திற்கு பதில் தராமலே இழுத்தடித்துவிட்டு 2012தைத்திங்களில் பேச்சு மேசையிலிருந்து அரசே விலகிவிட்டது. ஆனால் ராஜபக்ச எதற்கும் இணங்கவில்லை என்பதையும் இன்றுள்ள வலுவான இறுக்கமான ஒற்றையாட்சி அமைப்பிலும், நிர்வாக நிறைவேற்று முறை ஜனாதிபதி ஆட்சியிலும், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முதலான விதிகள் உள்ளடக்கப்பட்ட ஒற்றையாட்சியில், அதிகாரங்களைப் பகிர்வதென்பது சாத்தியமற்றதாகும்.
இந்த ஆட்சியிடம் இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் திடசங்கற்பம் இல்லை என்பதே நாம் கொண்டுள்ள எண்ணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் திட்டம் உண்டா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது? இதோ பாருங்கள்:- 1. 1972 ஆம் ஆண்டு மே திங்களில் புதிய அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இ.த.அ.கட்சி சார்பில் திரு.தருமலிங்கம் பா.உ அவர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி அரசியல் திட்டம் எங்களிடமிருக்கிறது.
2. 1983லிருந்து இலங்கைப் பிரச்சினையில் பிரதமர் இந்திராகாந்தியின் தலையீட்டின் பின் 1985ல் திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் இந்திய அரசினால் பிரதமர் ராஜீவ் காந்தியினால விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி, 1985 “டிசம்பர்” முதலாந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டம் அத் திட்டத்தின் 1ஆவது பிரிவில் “Srilanka that is Ilankai shall be a Union of States”, “அரசுகளின் ஒன்றியம்” என்றே ஆரம்பிக்கப்படுகிறது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஜே.ஆர் அரசு 30.01.1986, அளித்த பதிலின் இறுதியில் 5.1 ““This proposals are totally unacceptable that they are implemented the TULF would have all but attained Eelam” என்று பதிலளித்தது. (1985 திட்டத்தை ஏற்றால் தமிழீழத்தை அடைந்ததாகிவிடும்) 3. 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா உடன்படிக்கையிலும் 1965 ஆம் ஆண்டு டட்லி- செல்வா உடன்படிக்கையிலும் பிராந்திய சபைகள் தன்னாட்சியை நோக்கியவையாகவும் காணி நிலத்தை நிலைநாட்டுவதாகவும் இருந்தது.
4. 1989, 90களில் ஜனாதிபதி பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவில், நானும் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்டதொரு அரசியல் திட்டத்தை இந்திய அரசியலமைப்பை ஒத்ததாக அரசியல் திட்டத்தினால் தீர்வு காணவேண்டும் என திரு. மங்கள முனசிங்க சிபார்சு செய்திருந்தார். 5. 1995 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பீரிஸ் – நீலன் அரசியல் திட்டத்தின் முதற் பிரிவில் “ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டுஇ“பிராந்தியங்களின் ஒன்றியம் – “ருnழைn ழக சுநபழைளெ” என்ற மகுடத்திட்டம் -ஜனாதிபதி சந்திரிகா அரசும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து தயாரித்த திட்டம்.
6. ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்ககப்பட்ட நிபுணர் குழுவின் அரசியல் திட்டம் மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டம் 13ஆவது அரசியல் திருத்தம் 1987ல் உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது.இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வாகமாட்டாது என்ற எமது நிலைப்பாட்டை தற்போதய இந்திய அரசிடமும் தெரிவித்துவிட்டோம். இந்திய அரசுகள் கூட 13ஆவது திருத்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி “அதற்கும் அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அரசியல் தீர்வைக் காண வேண்டும்” என்று இலங்கை அரசிடம் தெரிவித்தால், 13ஆவது திருத்தம் மேற்குறித்த பின்னணிகளிலிருந்து அரசியல் தீர்வாக இருக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒற்றையாட்சியில் தீர்வு சாத்தியமில்லை இருந்தாலும் இலங்கை இந்திய ஒப்பந்தப்படிதானே வடக்கு கிழக்கு மாநிலங்கள் இணைப்பு மற்றும் ஒரே அரசியல் அலகு, சட்ட ஒழுங்கு மற்றும் காணி அதிகாரம், நிதி அதிகாரங்கள் உள்ளன.
உள்ள பிரச்சினை என்னவென்றால் 1. இலங்கையிலுள்ள வலுவான ஒற்றையாட்சித் திட்டத்தினால் தெளிவான திட்ட வட்டமான ஆட்சி அதிகாரப்பகிர்வு சாத்தியமற்றது. 13வது அரசியலமைப்புத் திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரம் பகிரப்படும் நோக்கில் 1987 ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்டதாகும். 13 “பிளஸ்” என்று பேசுபவர்கள் 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட விடயங்களில் கமநலச் சேவைகள், போக்குவரத்து முதலான அதிகாரங்களைப் பறித்தெடுத்து விட்டது. “திவிநெகும” சட்டத்தை நிறைவேற்றி நிதி அதிகாரங்களையும் எடுத்து விட்டனர் என்பதையும் தெரிந்து கொள்வார்கள். 2. நிர்வாக அதிகார ஜனாதிபதி முறை இருக்கும் பொழுதும் 18ஆவது திருத்தச் சட்டம் சுதந்திரமற்ற பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு இருக்கும் நிலைமையிலும் ஆட்சிப் பகிர்வு சாத்தியமற்றதாகின்றது. உதாரணமாக மாகாணங்களுக்குரிய மிகக் குறைந்தளவிலான நிதி கையாள்கை அதிகாரங்களைக் கூட மத்திக்கும், பொருளாதார அமைச்சருக்கும் திருப்பி எடுத்து மத்திய மயப்படுத்தும் “திவிநெகும” பிரேரணைக்கெதிரான எமது வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கும், அந்தத் தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கும் எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு செயல்பட்டமையையும் எடுத்துக்கொள்ள முடியும்.
அடுத்தது, அளவுக்கதிகமாகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட பேரினவாத இராணுவ ஆதிக்கமும், நில அக்கிரமிப்பு மற்றும் தமிழ், முஸ்லீம் மக்களின் இனக் குடிப்பரம்பலைச் சீர்குலைத்து மாற்றியமைத்து தேசிய இனமொன்றுக்குரித்ததான சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் மக்களுக்குரிய மனித உரிமை, மனிதாபிமான உருத்துக்கள் மற்றும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை இல்லாதொழிப்பதுமான, ஒரு இனத்துக்கான மொழி, மத, பண்பாடுகளை அழித்து இறுதியில் இன அடையாளங்களை அழித்துவிடும் பௌத்த ஆதிக்கத்தின் இன்றைய பௌத்த குருமாரின், பொது பலசேன இராவணசேன, தேசிய சுதந்திர முன்னனி முதலான சக்திகளின் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தையே நடைமுறைப்படுத்திவரும் ராஜபக்ச அரசு ஒன்றுபட்டிருந்த வடக்கு கிழக்கு மாநிலத்தைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, இராணுவ மயமாக்கி, சிங்கள மயமாக்கி, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகளையே அனுமதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் நாமே ஆட்சி செய்திருக்க முடியும். தற்போதும் ஒட்டுமொத்தமாக 41 உறுப்பினர் பெரும்பான்மை பெற்று இருக்கிறார்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தோம். இதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தியிருக்கிறோம். அடுத்து 13ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற எண்ணமும் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வுகாண வேண்டுமென்ற திடமான ஒருமைப்பட்ட நிலைப்பாடும், இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும், இலங்கையில் மாறி மாறி வந்த ஜனாதிபதிகளும் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு என்பதை திட்டவட்டமாகக் கூறிவிடலாம்.
போர்க்குற்றமும் சர்வதேச விசாரணையும் இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நாம் கொண்டிருந்த அணுகல் முறை மற்றும் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளை கைவிடாது சமர்ப்பித்த அரசியல் திட்டங்கள், அடிப்படைகளை மாறிமாறி வந்த அரசுகள் ஏற்றுப் பேச்சு நடத்த ஆயத்தமில்லை, இன்றுவரையுள்ள ஜனாதிபதியோ, அரசாங்கமோ இனப்பிரச்சினைத் தீர்வொன்றை முன்வைக்கத் திடசங்கற்பமோ, எண்ணமோ கொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவானதாகும். இந்த அரசில், ஜனாதிபதியிடம் நம்பகத்தன்மையை தமிழ் மக்கள் கொள்ளவும் இல்லை. 2011 ஐப்பசி 24ந் திகதி அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தது. திரு. சம்பந்தன் தலைமையில் நாம் சென்றிருந்தோம். 2009ல் முடிவுக்கு வந்த போரின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதாபிமான உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் எமது கருத்துக்கள் கேட்கப்பட்டன. சம்பந்தன் பதில்களின் நம்பகத்தன்மையின் பேரில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் 2012ல் மார்ச் மாதத்தில் போர்க்குற்ற விசாரணைப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதை உலகமே அறியும். ஒரு அரசியல் கட்சிக்கு மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக அங்கம்வகிக்கும் உரித்தில்லை என்பதையும் யாவரும் அறிவர்.
அரசுகளின் பிரதிநிதிகளும் தன்னார்வ மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் தான் பங்குபெறமுடியும் என்பதை அறியாதார் உள்ளனர். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் உறுப்புரிமை கொண்ட நாடுகளின் தலை நகரங்களில்தான் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் அந்த நாடுகளின் தலைமைகளுடன் முடிந்தளவு பேச்சில் ஈடுபட்டிருக்கிறோம். வெளியிலும் முக்கிய நாடுகளின் ஆலோசனை மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் அனுசரனையுடன் நாம் இராஜதந்திர நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகளின் நம்பகத்தன்மையை பெற்றளவில் வேலை செய்திருக்கிறோம்.
அமெரிக்க, பிரித்தானிய முதலான வல்லாண்மை நாடுகளின் முன்னெடுப்புக்களால் இராஜதந்திர நடவடிக்கைகளால் குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் தலைவி நவநீதம்பிள்ளை அவர்களின் உயர்ந்த முயற்சிகளால் தற்போதுள்ள போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இலங்கை வந்திருந்த மனித உரிமை பேரவை தலைவியுடன் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தமையை சுட்டிக்காட்டவேண்டும். போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அந்தப் பிரேரணை நாம் எதிர்பார்த்த அளவு நிறைவைத் தராது விட்டாலும் அதையாவது நிறைவேற்ற முடிந்தமை பெரும் இராஜதந்திரச் சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் நிறைந்த நாடுகளினால் தான் நிறைவேறியது.
இதனைக் கூட முறியடித்துவிட சிலர் அரசு தரப்பு மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் எடுத்த முயற்சிகளை எல்லோரும் அறிவார்கள். இந்தப் பிரேரணைகள் ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைப் பேரவைத் தலைவரின் அறிக்கைகளின் அடிப்படையில் தான்
















