சீனாவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்கு ஆதரவான தீர்மானம் சீனாவிற்கு விரோதமானதாக அமைந்துள்ளது.
வடகொரியாவினால் ஜப்பானியர்கள் கடத்தப்பட்ட வருவதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் இலங்கை அறிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேயிடம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதனால், சீனாவுடனான உறவுகளில் முரண்பாட்டு நிலைமை ஏற்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு எதிரான வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் நேச நாடான சீனா பூரண ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் சீனா, இலங்கையின் இந்தத் தீர்மானத்தை எவ்வாறு அணுகும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச அரங்கில் வடகொரியாவிற்கு சீனா பூரண ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1970களிலிருந்து வடகொரியா, காலத்திற்கு காலம் ஜப்பானியர்களை கடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளை பயங்கரவாதமாகவே நோக்கப்பட வேண்டுமென ஜப்பான் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வடகொரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இலங்கை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் இலங்கை நாடுகளின் தலைவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும் இந்த வடகொரிய விவகாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள.
அணுவாயுத உற்பத்தி உள்ளிட்ட சர்வதேச விமர்சனங்கள் எழுந்துள்ள விடயங்கள் குறித்து குறித்து வடகொரியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை முறைமையில் மாற்றம்கொண்டு வரப்பட வேண்டுமென இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனா ஜனாதிபதி இலங்கைக்கு இந்த மாதம் விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















