வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள சிறிய மழைக்கே ஈடுகொடுக்க முடியாமல் அவஸ்தையை எதிர்நோக்கி வருகின்றனர். மழை தொடருமித்து இடம்பெயர்வு தவிர்க்க முடியாததாகி விடும் என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். இந்த மக்களுக்கான அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.
உதவுவதற்கு அரச அதிகாரிகளும், அரசியல் தலமைகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். வலி.வடக்கில் 25 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத 34 முகாம்களில் வாழ்கின்றனர். ஆயுதப் போர் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்துவிட்ட போதும் அவர்களுடைய சொந்த நிலங்கள், வீடுகள் மீள ஒப்படைக்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் ஒருவேளை உணவிற்குக் கூடப் போராடும் நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் சஜீவன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அப்போது ஒதுக்கப்பட்ட அதே இடங்களில் சிறிய குடிசைகளில் வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகியபோதும் இருப்பிடங்கள், அதே சிறிய குடிசையாகவே உள்ளன. நெருக்கடி காரணமாக ஆண்கள் பெரும்பாலும் குடிசைகளுக்கு வெளியில் படுத்துறங்கும் நிலையே காணப்படுகின்றது. தற்போது ஆரம்பித்துள்ள சிறிய மழைக்குக் கூட ஈடுகொடுக்கும் நிலையில் இந்த மக்களின் குடிசைகள் இல்லை. மழை தொடருமாயின் மோசமாக அவலநிலையை இவர்கள் எதிர்நோக்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
நாளாந்த கூலித் வேலைகளையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்த மக்களுக்கு மழை ஆரம்பித்தால் அந்த வேலைகள் கூட இல்லாதுபோகும். எனவே, அவலம் வருமுன் திட்டமிட்டு அதிலிருந்து இந்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடனடியாக மேற்கொள்ள முன்வரவேண்டும் எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
















