இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை என இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தொலை தூரத்தில் அமெரிக்கா இருப்பதாலும், இலங்கை குறித்த அதிக கவனத்தை அந்த நாட்டு மக்கள் செலுத்தாததாலும் தற்போதும் அவர்களது நிலைப்பாடு மாறவில்லை என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகள் வாயிலாக அறியும் விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை குறித்த தமது வெளிப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளது. இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை.
இதற்கான காரணங்களாக, இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும், மக்கள் அந்த நாடு குறித்து அதிக கவனம் செலுத்தாததும் முக்கியமாகின்றன. குறிப்பாக இலங்கை தொடர்பில் அறிந்துகொள்ள பெருமளவு அமெரிக்க மக்கள் பத்திரிகைகளையே நம்பியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் சக்திகள், பயங்கரவாத நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்கு சில காலம் எடுக்கலாம்.
ஆனால் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் இலங்கை குறித்து சாதகமான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















