பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அண்ணன் தம்பிகளாக அல்லது அலரிமாளிகை வேலைக் காரர்களாக என்பது தொடர்பில் சர்ச்சையொன்று நேற்று சபையில் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதிக்கான பணியாளர் தொகுதி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளித்துக் கொண்டிருந்தார்.
இதன் போது சில கேள்விகளின் போது அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் சகோதரரான பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தனவும் சில விடயங்களை கூற முற்பட்டார்.
இதனையடுத்தே கொஞ்சம் பொறுங்கள் நான் அண்ணனிடம் கேட்டால் தம்பி நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள்? அண்ணானிடம் கேட்டால் தம்பியா பதிலளிப்பது? என அநுர குமார திஸாநாயக்க எம்.பி கேட்டார்.
இதனை எதிர்த்த அரச தரப்பு எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் அண்ணன் தம்பியென்ற உறவு முறை கிடையாது இங்குள்ளவர்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் மட்டுமே. உறவு முறைகளை குறிப்பிட முடியாது என்றார்.
இதன் போது எழுந்த அனுர குமார திஸாநாயக்க எம்.பி இச்சபையில் அண்ணன் தம்பி மட்டுமல்ல அலரி மாளிகை வீட்டு வேலைக்காரர்களும் இருக்கின்றனர் என்றார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.
















