13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து ஜனாதிபதி சீற்றமடைந்தார் என்று வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ளதுடன், ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.
குறித் நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் :- ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து நான் சீற்றமடைந்தேன் என வெளியான கருத்துக்களை நிராகரிக்கின்றேன். ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமை சகலருக்கும் உள்ளது.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின்போது இந்தியப் பிரதமரை சந்திக்க விரும்புகின்றேன். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் வாக்கெடுப்பின்போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு நன்றியையும் தெரிவிக்கின்றேன்.எங்களது அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளூரில் விசாரணையை முன்னெடுக்கிறது. இதனால் விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த விடமாட்டோம்.காணமற்போன 20 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன’ என்றும் கூறினார்.
















