இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று சிறையிலடைப்பதாகவும் அவர்களை மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் கடிதமொன்றை எழுதியுள்ளார். சிறிது காலம் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெறாமல் இருந்த நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் அவர்களை தாக்கி கடத்திச் செல்வதாகவும், இந்திய மீனவர்களின் விடயத்தில் இலங்கை கடற்படையினரின் போக்கு மாறவில்லையெனவும் அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தான் கடைசியாக எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து மூன்று தடவைகள் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஜெயலலிதா கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், இராமேஸ்வரத்திலிருந்து 6 படகுகளில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் தலைமன்னாருக்கு கடத்திச் செல்லப்பட்டதாவும், நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாகவும், தஞ்சை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்கள் 78 பேர் மற்றும் அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய 72 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களை விடுதலை செய்து படகுகளை மீட்பதற்கு இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்துமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையுமென ஏற்கெனவே தான் எழுதிய கடிதத்தை இக்கடிதத்திலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















