வடமாகாண முதலமைச்சரின் நியதிச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கும் மாகாண சபைகள் சட்டத்திற்கும் முரணானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு மாகாணசபை சட்டத்திற்குட்பட்டு செயற்படுமாயின் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர் சந்திரசிறி , மாகாண ஆளுனர், மாகாணசபை மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு இருக்கக் கூடிய அதிகாரங்கள் குறித்து விளக்கமளித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் வடமாகாணசபை 3 நியதிச் சட்டங்களை எனக்கு அனுப்பியிருக்கின்றது. அதில் முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டம் மற்றைய மாகாணங்கள் எவற்றிலும் இல்லாததுடன், அரசியலமைப்பினையும் மாகாணசபைகள் சட்டத்தினையும் மீறுவதாய் உள்ளது. மேலும் மாகாண சபையில் மாகாணசபை நிதியம், அவசரகால நிதியம் ஆகிய இரு நிதியங்கள் மட்டுமே இருக்க முடியும்.
முதலமைச்சர் நிதியம் என்ற 3வது நிதியம் இருக்க முடியாது. அத்துடன் முதலமைச்சர் நிதியத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பிவைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் 2 நிதியங்கள் மட்டுமே இருக்க முடியும் என்னும்போது ஆளுநர் நம்பிக்கை நிதியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் விலகிக் கொண்டார்.
















