சம்பந்தனிடம் பேசினேன் – விக்கியை பிடிக்க முடியவில்லை எனப் புலம்புகிறார் கோத்தாபய
காவல்துறை அதிகாரங்களைக் கூட ஓரளவு பகிர்ந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
இது விடயமாக சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க கிடைக்கவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபஸ தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேயர் முஸாமிலுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் ஏன் வடக்கு கிழக்கில் அவ்வாறு செயற்பட முடியாது என குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளுக்கு ஒத்துழைக்க முடியும் என தெரிவித்தார்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் என்னிடமும் மனோ கணேசனிடமும் கூறினார் என யோகராஜன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த யோசனைத் திட்டமானது எந்த அளவிற்கு இதய சுத்தியுடன் முன்வைக்கப்பட்டது என்பதனை நாம் யோசிக்க வேண்டுமென யோகராஜன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கின் வாக்குகள் ஒட்டு மொத்தமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுவிட்டால் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் இவ்வாறு தமது நிலைப்பாட்டை கோதபாய தளர்த்திக் கொண்டுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
அண்மையில் ஏற்பட்டுள்ள இந்திய – இலங்கை – பாகிஸ்தானிய புலனாய்வு வலையமைப்பு சிக்கல்கள்,
சீனாவுடனான நெருக்கம்…
யப்பானை வடகொரிய விடயத்தில் ஆதரித்தமை…
ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின இறுக்கமான் சுற்றி வளைப்பு….
ஆமெரிக்கா – பிரித்தானியா – கனடா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள்….
உள்நாட்டில் நடுத்தர வர்க்க நகரப்புற மக்களிடையே அதிகரித்துவரும் மகிந்த ஆட்சிக்கு எதிரான மனோ நிலை
என பல பிரச்சனைகளால் திணறுகின்ற அரசாங்கம் கூட்டமைப்பை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற ராஜதந்திர நகர்வுகளை முடக்கி விட்டுள்ளது….
இந்த நெருக்கடியான சூழலில் தமிழ்த் தரப்புகள் எடுக்கும் நிதானமான முடிவுகளிலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியிருப்பதாக கொழும்பில் ராஜதந்திர மட்டங்களுடன் நெருக்கமான முக்கியஸ்த்தர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
















