‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தொழில் கூட்டாளி என்பதற்காகவே அப்படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவர் சார்பாக ‘ஐயங்கரன்’ கருணாமூர்த்தி உட்பட கத்தி டீமில் பல பேர் விளக்கம் கொடுத்தும் எதிர்ப்பாளர்கள் கேட்டபாடில்லை.
இதற்கிடையே இப்பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
1989 ஆம் ஆண்டிலேயே நான் இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வந்து விட்டேன்.
இலங்கையில் எனக்கு யாருமே சொந்தமில்லை. எல்லா சொந்தக்காரர்களும் ஐரோப்பிய நாடுகளில் தான் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் என்னை எதிர்க்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் என்னை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் அவர்கள் லைகா மொபைல் சேவையையும் எதிர்த்திருக்க வேண்டுமல்லவா..?
நான் ராஜபக்ஷேவை சந்திக்கவே இல்லை. லைகா பேனரில் அவர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நானும் தமிழன் தான். தமிழ் என்னுடைய தாய். எந்த தாய்க்காவது சொந்த மகன் துரோகம் செய்வானா..? இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் சினிமாவுக்கு புதிதாக கிளம்பி வரவில்லை. ஏற்கனவே தமிழில் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். அந்தப்படத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஹீரோ விஜய் மற்றும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு பேரும் பிரபலமானவர்கள் என்பதால் ‘கத்தி’ படத்தை எதிர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் சூர்யாவை வைத்தோ சீமானை வைத்தோ நான் எந்தப்படத்தையும் தயாரிக்கவில்லை, அப்படி எந்தத் திட்டமும் இல்லை.
இவ்வாறு சுபாஸ்கரன் அல்லிராஜா கூறியிருக்கிறார்.
















