முதல் மரியாதை அளிப்பது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறு ஒன்றில் நடிகை ரோஜாவை மர்மநபர் கத்தியால் வெட்டியதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் கோவில் விழா ஒன்றில் நடந்துள்ளது. இந்த செயலை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் உள்ள நகரி என்ற பகுதியில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. இந்த சிறப்பு மிக விழாவில் பிரபல நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.வுமான ரோஜா கலந்துகொண்டார். 500 பெண்களுடன் சீர்வரிசையுண்ட வெகு ஆடம்பரமாக வந்த நடிகை ரோஜாவுக்கு முதல் மரியாதை அளிக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அப்போது அங்கு வந்த தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முத்துகிருஷ்ண நாயுடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். திருவிழா நடைபெறும் கிராமத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பெரியவருக்குத்தான் முதல் மரியாதை செய்ய வேண்டும் என்றும் ,ரோஜாவுக்கு முதல் மரியாதை செய்யக்கூடாது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதல் முற்றி கலகலப்பு ஏற்பட்டது. இந்த இடைவெளியில் பூசாரி முதல் மரியாதை தட்டை நடிகை ரோஜாவிடம் கொடுக்கும்போது தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஒருவர் பூஜை தட்டை தட்டிவிட்டு ரோஜாவின் கையில் கத்தியால் கீறினார். இதனால் ரோஜாவின் கையில் ரத்தம் குபுகுபுவென கொட்டியது. உடனடியாக அங்கிருந்த டாக்டர் ஒருவர் ரோஜாவுக்கு கையில் கட்டு போட்டார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ரோஜாவை போலீசார் சமாதானப்படுத்தி அவர்களின் பாதுகாப்போடு ரோஜாவுக்கு முதல் மரியாதை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனால் பரபரப்பு அடங்கியது.
இந்தநிலையில் ரோஜா மீதான தாக்குதலை கண்டித்தும் கத்தியால் குத்திய மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தியும் நகரி போலீஸ்நிலையம் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















