மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தியது போல, இலங்கையில் இருந்து கடல் வழியாக புகுந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதை உறுதிபடுத்தும் வகையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், தங்கள் ஆதரவு உளவாளிகளை தமிழகத்திற்குள் ஊடுருவ விட்டுள்ளனர்.
ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் தமீம் அன்சாரி திருச்சியிலும், சாகீர் உசேன், சிவபாலன், சலீம், ரபீக் மற்றும் அருண் செல்வராசன் ஆகியோர் சென்னையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் முகமது உசேன் என்ற உளவாளி கைதாகி இருக்கிறார். இவர்களில் அருண் செல்வராசன் கடந்த வாரம் சென்னை சாலி கிராமத்தில் கைதானார். கைதான சாகீர் உசேன், அருண் செல்வராசன் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த உளவாளிகளை தமிழக கியூ பிரிவு பொலிஸாரும், மத்திய அரசின் தேசிய புலனாய்வுப்பிரிவு பொலிஸாரும் இணைந்து அதிரடி வேட்டை நடத்தி பிடித்துள்ளனர். கைதாகி உள்ள அருண் செல்வராசன் திடுக்கிடும் தகவல்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் நிருபர் போல போலி அடையாள அட்டையுடன், செய்தி சேகரிப்பது போல சென்று பல்வேறு தகவல்களை சேகரித்து, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். மேலும் உளவுப்பிரிவு பொலிஸ் அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை, இந்திய, இலங்கை பாஸ்போர்ட்டுகள் போன்றவையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அருண் செல்வராசன் தமிழகத்தின் 20 முக்கிய இடங்களை படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள், பழமையான கோவில்கள், கல்பாக்கம், கூடங்குளம் அணுமின்நிலையங்கள், சென்னை தலைமைச் செயலகம், சென்டிரல் ரெயில் நிலையம் போன்ற முக்கியமான 20 இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் 20 தற்கொலைப்படை தீவிரவாதிகள், கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஒருவேளை தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக, தமிழகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள, தயார் நிலையில் தமிழக பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 13 கடலோர மாவட்டங்களிலும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடல் வழியாக புகுந்து தமிழகத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை தகவல் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து வந்த தகவலாகும். தற்போது புதிதாக எந்த தகவலும் வரவில்லை. மும்பையில் தாக்குதல் நடந்தவுடன், தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துவிட்டால், அவர்கள் யாரும் உயிரோடு திரும்பிச்செல்ல முடியாது. அடுத்தகணமே, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 400 கமாண்டோ வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து அதி நவீன பயிற்சிகளும் இந்த கமாண்டோ படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு படைவீரர்களும் சென்னை அருகே தயார் நிலையில் இருக்கிறார்கள். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் மிகத்தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
13 கடலோர மாவட்டங்களில் உள்ள 590 மீனவர் கிராமங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கடல் வழியைப்பற்றி நன்கு தெரிந்த 500 மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அன்னிய படகுகளில் எத்தகைய மாறுவேடத்தில் தீவிரவாதிகள் வந்தாலும், இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். தீவிரவாதிகளுடன் கடலில் சண்டை போடும் திறமை மற்றும் தீவிர பயிற்சி பெற்ற 28 கமாண்டோ படை வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ளனர்.
கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஏற்கனவே 12 கடலோர பொலிஸ் நிலையங்கள் உள்ளன. மேலும் 30 புதிய பொலிஸ் நிலையங்களை திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அந்த பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு திறப்பதற்கு தயார்படுத்தப்படுகிறது. விரைவில் அந்த பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும்.
இது தவிர 34 ஆயிரம் மீனவர் படகுகளும் கடலில் ரோந்து பணிக்கு பயன்படும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. அந்த படகுகள் வாயிலாகவும் ரோந்துபணி நடக்கிறது. நமது மீனவர்கள் மீன்பிடிப்பதோடு, நமது கடல் எல்லை பாதுகாவலர்களாகவும் தற்போது வலம் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பூச்சாண்டியைக் கண்டு தமிழக மக்கள் அச்சப்பட தேவை இல்லை. மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தியதுபோல, தமிழகத்திலோ, நமது அண்டை மாநிலங்களிலோ எளிதில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கி விடமுடியாது என அந்த அதிகாரி கூறினார்.
















