சீனா-இலங்கை உறவை வலுப்படுத்தும் முகமாக சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் அவரது பாதிரியாருடன் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
மேற்படி சீன அதிபரையும் பாதிரியாரையும் வரவேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட ஏற்படுகளை செய்திருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் சீன அதிபர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட இருப்பதாகவும் பூர்த்தியான சில திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகயில் புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ஆம் 3 ஆம் கட்டங்கள் இரு நாட்டு ஜனாதிபதிகளினால் நாளை திறந்துவைக்கப்பட உள்ளன.
அத்துடன் மின் சக்தி தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்தே இரு நாட்டு தலைவர்களும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை திறந்து வைக்க உள்ளனர்.
மின்சக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தமும் மின்சார சபையுடன் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளன. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 2ஆம் 3ஆம் கட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதோடு தேசிய மின் கட்டமைப்புடன் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் இணைக்கப்படுகிறது.
அடுத்து 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கின்றது.
இதேவேளை சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீன அதிபர் இலங்கையில் இருக்கும் இரு நாட்களில் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
















