இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன ஜனாதிபதி நிவாரணங்களை எடுத்து வரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி இலங்கைக்கு பாரியளவில் உதவிகளையும் நிவாரணங்களையும் எடுத்து வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது. எனினும், உண்மையான நிலைமை அதுவல்ல.
பாரியளவிலான வட்டிக்கு சீன ஜனாதிபதி, இலங்கைக்கு கடன் வழங்க உள்ளார்.
இந்தக் கடன் கல்வி, வறுமை ஒழிப்பு, கிராமிய வைத்தியசாலை அபிவிருத்தி உள்ளிட்ட நலன் திட்டங்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், கடலை நிரப்பி தீவுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கே கடனுதவி வழங்கப்படுகின்றது.
இவ்வாறான கடன் தொகைகளையே அரசாங்கமும் விரும்புகின்றது.
இந்தக் கடன் தொகையானது இலகுக் கடன் அடிப்படையிலானதல்ல, அதிகளவு வட்டிக்கே இந்தக் கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் நிலவி வரும் வரட்சி காரணமாக மூன்று லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியில்லை.
அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதனைத் தவிர வேறு எந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவதில்லை.
சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் நாட்டம் காட்டுவதில்லை.
கடந்த காலங்களில் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் உதவிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கங்கள் பேணிய வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாடுகளுடனான நட்புறவின் அடிப்படையில் உதவிகள் கிடைக்கப்பெற்றன.
விக்டோரியா, ரந்தெனிகல உள்ளிட்ட நீர் மின் திட்டங்கள் உதவிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், இந்த அரசாங்கம் அதிகளவு வட்டிக்கு கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நீர் விநியோக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
















