இளைய தளபதி விஜய் மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரும் ‘கத்தி’ திரைப்பட தயாரிப்பு நிறுவன குழுமத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தினர் இப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி பலவித வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா, லைக்கா குழுமத்தின் உப தலைவர் திரு. பிரேமானந்தன் சிவசாமி, லைக்காமொபைல்ஸ் நிர்வாக அதிகாரியான திரு.கிரிஸ் டூலி மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளரான திரு. கே.கருணாமூர்த்தி ஆகியோர் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளரான திரு. கே.கருணாமூர்த்தி ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றும் போது இலங்கை அரசின் ஆதரவில் நடந்த பொதுநல வர்த்தக மன்றத்தின் படங்களை லைக்கா நிறுவனத்துடன் இணைத்து உருமாற்றியது பற்றிக் கூறினார். இலங்கை இராணுவ ஹெலிகொப்டரில் இருந்து லைக்கா குழுமத் தலைவர் இறங்குவது போன்ற படம் பற்றி கூறுகையில் குறிப்பிட்ட சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்களை கொண்ட ஹெலிடூர்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து அந்த ஹெலிகொப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டதே தவிர அதற்கும் இலங்கை அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கிக் கூறினார்.
இலங்கை அதிபருடன் லைக்கா குழுமத்தின் பல நிறுவனங்கள் தொடர்பு படுத்தி பேசப்பட்ட விடயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு லைக்கா குழுமத்தின் நிறுவனர்கள் தக்க பதில் அளித்து தெளிவு படுத்தினர். இதன் மூலம் ‘கத்தி’ திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திட்டமிட்டபடி கத்தி திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெறும் என்றும் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















