இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பத்துடன் எவ்வித வர்த்தக தொடர்புகளும் இல்லையென, கத்தி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார். ‘கத்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமானது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வெளியாகியிருந்த தவறான பிரசாரங்கள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே, லைகா குழுமத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக மன்றத்தில் லைக்கா நிறுவன சின்னம் காணப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, சென்னை இணைய குற்றப் பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை நிரூபிக்கும் ஆவணப்படமும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ‘கத்தி’ படம் வெளியாகுமென்றும், எதிர்வரும் காலத்தில் ஹிந்தி பட தயாரிப்புகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படமானது லைக்காவின் ஞானம் தயாரிப்பில் வெளியாகிய நிலையில், ‘கத்தி’ திரைப்படம் ஏன் லைக்கா தயாரிப்பில் வெளியாகின்றதென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லைக்கா குழுமத் தலைவர், லைக்கா நிறுவனம் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அறியப்பட்டதென்ற காரணத்தாலேயே இப்பெயரில் வெளியாகவுள்ளதாக தெரிவித்தார்.
‘கத்தி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
–
–
















