மக்களுக்கு சுகாதாரமான, சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வெகு விரைவில் சேரிகளற்ற நிலைமை நாட்டில் உருவாக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் நேற்று இடம் பெற்ற “நகர விரிவாக்கமும் மீளெழுச்சியும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள மக்கள் நகரமயமாக்கல், நகர அபிவிருத்தியினை உச்சகட்டமாக அனுபவித்து வருகின்றனர். 2020 இலங்கையில் மக்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில் இந்த நகர எழுச்சித்திட்டம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
கொழும்பு உட்பட அதனை அண்மித்த பிரதான நகர் பகுதிகள் மழை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக நீரில் மூழ்கியது. பாராளுமன்றம் கூட நீரில் மூழ்கியது. இதனை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு உலக வங்கியின் உதவியுடன் கொழும்பு நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்தது. இதன் பயனாக தற்பொழுது கொழும்பு நகர் நீரில் மூழ்குவதில்லை. கால்வாய்கள், பேர வாவிகள், வடிகான்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அழகிய தோற்றத்தில் கொழும்பு காட்சியளிக்கின்றது. கொழும்பை போன்று காலி, மாத்தறை, நுவரெலியா, நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும், கண்டி, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் எதிர்காலத்தில் “ஸ்மார்ட் சிட்டி” என்ற எண்ணக்கருவிற்கு செல்ல வேண்டும். அதனை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என அவர் தெரிவித்தார்.
















