சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள பாலிவுட் படம் ஒன்றை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதித்யா, கவிதா, சுனில் பால், ரீமா லாகோ, ஷக்தி கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் Main Hoon Rajnikanth என்ற பாலிவுட் படத்திற்கு ரஜினியின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தபோது, ரஜினி தரப்பில் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி Main Hoon Rajnikanth படத்திற்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் Main Hoon Rajnikanth படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காமெடி மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகை கவிதா, ரஜினியின் ரசிகையாக நடித்திருப்பதால் இந்த டைட்டில் வைத்திருப்பதாக படத்தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் கூறப்பட்டிருந்தாலும், அந்த விளக்கம் எடுபடுமா? என்பதை வரும் 22ஆம் தேதிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பப்பிலஹரி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
















