எல்லைப் பகுதியில் சரியான வரையறை இல்லாததால் சில சம்பவங்கள் (ஊடுருவல்கள்) நடைபெறுகின்றன என்று இந்தியா வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனா அதிபர் ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சீனா அதிபர் ஜின்பிங் கூறியதாவது:
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக சீனா உள்ளது. மோடி தலைமையிலான இந்தியா மேலும் வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. இருநாடுகளுக்கும் வளர்ச்சி முக்கியம் இரு நாடுகளும் வளர்ந்து வரும் உலகத்தின் மிகப்பெரும் சக்திகள்.
நரேந்திர மோடி விரைவில் சீனாவிற்கு வருகை தர வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார கலாச்சாரத் துறையில் ஒத்த கருத்துக்கள் உள்ளன.
ஆசிய நாடுகளுக்கு இடையே சாலைவழிப்போக்குவரத்தை மேம்பபடுத்த வேண்டும். இருநாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இருப்பதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் அளிக்கும்.
இந்திய ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீனா உதவி செய்வோம்.
இந்தியாவில் சீன மொழியை பயிற்றுவிக்க 1500 ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். 2015ஆம் ஆண்டு இந்தியாவை பார்வையிடுவோம் என்று சீனாவிலும் 2016ஆம் ஆண்டு சீனாவை பார்வையிடுவோம் என்று இந்தியாவிலும் கடைபிடிக்கப்படும்.
எல்லை எது என்பதை தீர்மானிபப்தில் ஏற்படும் சிறு குழப்பமே சில பிரச்சினைகளுக்கு காரணம். இருப்பினும் எல்லை பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது இரு நாடுகளுக்கும் தெரியும். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சீனா தயராக இருக்கிறது. சார்க் நாடுகளுடனான உறவு மேம்பட இந்தியா உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜின்பிங் கூறினார்.
















