இன்று ஒரு புதிய தேசம் உருவாகுமா…?: ச.ச.முத்து

“for one chance, just one chance, to come back here and tell our enemies that they may take our lives, but they’ll never take… OUR FREEDOM! (” brave heart”-movie)

‘இதோ ஒரு முறை, ஒரே முறை முன்வாருங்கள். எங்களின் எதிரிகளின் முகங்களுக்கு முன்னால் வந்து வீரமுடன் கூறுங்கள். நீங்கள் எங்கள் உயிரை பறிக்கலாம்.ஆனால் ஒருபோதும், ஒருபோதும் அவர்களால் எமது சுதந்திரத்தை, விடுதலை உணர்வை பறிக்கவே முடியாது என்று’ வீரமுடன் ஸ்கொட்லாந்து சுதந்திர போராட்ட வீரன் வில்லியம் வேலஸ் கூறுவதுபோலவே மெல்கிப்ஸன் ‘ப்பிரேவ் கார்ட்’ திரைப்படத்தில் கூறுவதுபோல ஸ்கொட்லாந்து இன்று தனது முடிவை, தீர்மானத்தை வாக்குகள் வாயிலாக அறிவிக்க இருக்கிறது.

ஐக்கிய இராச்சியம் என்ற பெயருக்குள் ஒரு அங்கமாக விளங்கிவரும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இலலையா என்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இதுவரை நடந்த கருத்துகணிப்புகள் எல்லாம் பெரிய வித்தியாசங்கள் இன்றி பிரிந்து செல்வதற்கு 51வீதமும் இல்லை என்பதற்கு 49வீதமும் என்றே மாறி மாறி மாறி காட்டிவந்துள்ள நிலையில் இன்றைய வாக்களிப்பு என்பது ஒரு முடிவை தெரிவிக்கும் என்றே தெரிகிறது.

பசுமையான மலைகளும் அவற்றிடையே நீண்டு கிடக்கும் ஏரிகளும் பள்ளத்தாக்குகளும் என்று வனப்புமிகு நிலம் ஸ்கொட்லாந்து. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் பார்த்து மகிழ்ந்த காரி பொட்டர் (HARRY POTTER) திரைப்படத்தில் காரிபோட்டரும் நண்பர்களும் திரியும் அந்த மலைகளும் ஏரிகளும் ஸ்கொட்லாந்தின் மண்தான். இடைக்கிடை அந்த மலைகளின் உச்சியில் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கும் பழங்கால அரண்மனைக் கொத்தளங்கள். என்று அழகழகான நிலம் அது. ஐக்கிய இராச்சியத்தின் முடி போன்ற தலைப்பகுதியே ஸ்கொட்லாந்து. இயற்கையின் அத்தனை வளங்களும் அள்ளித் தெளித்த அழகுபூமி. வரலாறும் அங்கே மிகமிக செழுமையாகவே காலகாலமாக இருந்திருக்கிறது. ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழமையான கிராமம், மிகவும் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருந்த பழமையான குடியிருப்பு என்பன ஏறத்தாள ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டன. அப்படியான முதற் குடியிருப்புகளை கொண்ட அந்த தேசம்தான் தனித்தேசமாக பிரிவதற்கான வாக்களிப்பில் இன்று நிற்கிறது.

1707ல் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டாலும் அதன் பின்னும் பிரிந்து செல்வதற்கான ஏராளம் முயற்சிகள். போர்கள்-புரட்சிகள்.. அதிலும் வில்லியம் வேலஸ் என்பரின் தலைமையில் நிகழ்ந்த சுதந்திர போர் ஒருபெரும் வரலாறு.. இன்றும் ஸ்கொட்லாந்தின் அத்தனை முக்கிய இடங்களிலும் மலைகளின் உச்சியிலும்கூட ‘வில்லியம் வேலஸ்’ க்கான நினைவை மண்டபங்களாக, சிலைகளாக ஸ்கெர்லாந்து மக்கள் நிறுவி இருப்பது அவர்களின் விடுதலை மீதான் தொடர்ந்த தேடலுக்கு ஒரு உதாரணம். மிகுந்த எண்ணெய் வளமும் கனிம வளமும் நிறைந்த இந்த நிலத்தின் மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைவிட பிரித்தானியாவின் ஆளும் எதிர்கட்சிகள் எல்லாம் ஸ்கொட்லாந்து பிரிவதற்கு எதிரான கருத்துகளிலும் பிரச்சாரங்களிலும் மும்முரமாக இறங்கி உள்ளார்கள் என்பதுதான் முக்கியம்.

சிங்களத்துக்கு இருக்கும் அதே மனோபாவம்தான். அங்கும் ஆயிரம் முட்டிமோதல்கள், பிரச்சனைகள் இருந்தாலும்கூட தமிழர்களுக்கு உரிமை வழங்குதல் என்று வந்தவுடன் எல்லா சிங்கள கட்சிகளும் சேர்வது போலவே இங்கும் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எல்லாம் இப்போ ஓரே அணியில். என்னதான் ஜனநாயகம், மனித உரிமை, அது இது என்று அடுத்தவர்க்கு உபதேசம் செய்தாலும் தமது ஆளுமை, தமது பிராந்தியம், தமது ஆட்சி என்று வரும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள்… என்ன செய்வார்கள் என்பதற்கு இதுவே ஒரு சின்ன உதாரணம்தான்.

வாக்களிக்கப்போகும் மக்களுக்கு ஒருவிதமான மிரட்டல் தோரணையிலேயே பிரதமரதும், அமைச்சர்களதும், இங்கிலாந்து எதிர்க்கட்சிகளதும் அறிக்கைகள் இருக்கின்றன. இந்தா நீ பிரிந்து போகப்போகின்றாயா.. பிரிந்து போனால் பெரும் பொருளாதார கடனுக்குள் (243 பில்லியனுக்கு அதிகமாக) முழ்கப்போகிறது ஸ்கொட்லாந்து, பொருளாதாரம் அதளபாதாளத்துள் செல்லப்போகிறது.. அப்படி சென்றால் இதுவரை காலமும் இதனை நிர்ணயித்து வந்த இங்கிலாந்து வங்கி ஒரு சிறு உதவிகூட செய்யப்போவதில்லை’ என்ற மிரட்டலில் இருந்து, ஸ்கொட்லாந்தில் உள்ள தொழில் முனைவோர் ஒரு இரவுக்குள் அங்கிருந்து இங்கிலாந்துக்கு மூட்டைகட்டி விடுவார்கள். இதனால் ஸ்கொட்லாந்து வேலை இல்லா திண்டாட்டத்தாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாலும் திண்டாடும் என்ற எதிர்வுகூறுகள்.

இதனை எல்லாவற்றையும்விட எங்கள் ஆசியா நாட்டு தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு அற்புத கருத்தையும் ஆளும் பிரித்தானிய தரப்பு கூறி இருக்கிறது ‘ ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடானால் பயங்கரவாதம் அந்த வாசல் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்துவிடும் ‘ என்று.
ஆனால் இப்படியான மிரட்டல்கள் அங்கு, ஸ்கொட்லாந்தில் ஒருவிதமான எதிர்ப்பு அலையையே, உருவாக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமாகிய, அன்டி முரே 2.7 மில்லியன் தொடர்வோரை கொண்ட தனது ரிவீற்றில் ஸ்கொட்லாந்து பிரிவதற்கு, சுதந்திற்கு ஆதரவாக கருத்து சொல்லி இருப்பது மிக அண்மைய திருப்பம்..

எது எப்படி இருப்பினும் இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ள இருக்கும் 4.4 மில்லியன் மக்களின் முடிவே எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும்…

இந்த வாக்களிப்பில் என்ன முடிவு வந்தாலும்கூட இனி அது ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தையே நோக்கி செல்லும் என்பதுதான். பெரிய ஒரு வெட்டி கொல்லுதல், கழுத்தை அறுத்தல், ஸ்கொட்லாந்து மக்களின் காணிகளில் இங்கிலாந்து மக்கள் அடாத்தாக குடியிருப்பது போன்றன, ராணுவ கண்காணிப்பு நிறைந்த ஒரு திறந்தவெளி சிறைச்சாலைத்தன்மை, இனக்கொலை என்பன இல்லாது விட்டாலும்கூட இன்னொரு ஆட்சி என்பது ஏற்புடையது அல்லவே அல்ல என்று எழுந்து நிற்கும் ஸ்கொட்லாந்து மக்களின் உணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவிதமான அழுத்தங்களும், தினமும் சுற்றிவர ராணுவ நடமாட்டத்துள் வாழ்வதும், காணாமல் போதல்களும், மர்ம மரணங்களும் இனக்கொலையும் நிறைந்த ஒரு வாழ்வுக்குள் வாழும் நாம் இதனைவிட இன்னும் எவ்வளவு அழுத்தமாக உறுதியாக சுதந்திரத்துக்காக எழ வேண்டும் என்ற பாடம் வேண்டும். இதிலிருந்து ஒன்றை பார்க்கவேண்டும் நாம். வெறுமனே பொதுக்கணிப்பு ஒன்றை தமிழீழ மக்களிடம் நடாத்துமாறு சர்வதே சமூகத்திடம் கோரிக்கைவிடும் நாம் அப்படி ஒரு கணிப்புக்கு சர்வதேசம் தனது அதி உச்ச அழுத்தத்தை பயன்படுத்தி சிங்கள பேரினவாத அரசை தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ள வைத்தாலும்கூட, அரசு தயார் என்றாலும்கூட அது எவ்வகையான மனஉறுதிக்குலைவுகளை, அதற்கான பிரச்சாரங்களை செய்யும் என்பதை. மனித விழுமியத்தின் உச்சத்தில் நிற்பதாக சொல்லிக்கொள்ளும் இங்கிலாந்து ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிராக செய்யும் பிரச்சாரங்கள், அறிவிப்புகளில் இருந்து படித்து கொள்ள வேண்டும்.

(இப்போதைய ஐக்கிய இராச்சியத்துக்கு இருக்கும் ட்றில்லியன் பெறுமதியான கடன் சுமையில் ஒருபகுதியை ஸ்கொட்லாந்து பிரிந்துபோனால் அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மிரட்டல்தான் உச்சம்..)

நம்மை சுற்றி உள்ள ஒவ்வாரு அசைவும் நமக்கு ஏதோ ஒரு வகையில் சாதகமாகவோ பாதகமாகவோதான் இருக்கும். ஆனால் சுதந்திரத்துக்கான போரை உலகு காணாத அர்ப்பணங்களுடன் நடாத்திய ஒரு மக்கள் என்ற முறையில் ஒவ்வொரு உலக அசைவில் இருந்தும் நாம் எதனை கற்றுகொள்ளலாம், எப்படி அதனை நமது விடுதலைக்கு பாவிக்கலாம் என்று பார்த்தே ஆகவேண்டும். வெறும் ஒற்றை துப்பாக்கியுடன் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப்போராட்டம் உலகின் மிகப்பலம் பொருந்திய ஒரு விடுதலை அமைப்பாக மாறியதற்கு தேசிய தலைவர் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு அசைவையும் ஊன்றி அவதானித்து அதனை தமிழீழ விடுதலைக்கு என்று மாற்றியதாலேயே ஆகும்.

நாளை அதிகாலைக்குள் தெரிந்துவிடும் ஸ்கொட்லாந்தின் சுதந்திர முடிவு எமக்கான ஒரு உந்துதலை அளிக்கும். என்ன முடிவு வெளிவந்தாலும்கூட அது விரைவான ஸ்கொட்லாந்து விடுதலையையே கொண்டுவரும் என்பது திண்ணம்.

அந்த மக்களுக்கு எமது வாழ்த்துகள்.

விடுதலையின் பெயராலும் சுதந்திரத்தின் பெயராலும் எப்போதும் ஒன்றாக நிற்போம்.

Tags: ,

Leave a Reply