திரைப்படம் எடுத்து பெயர் வாங்கும் இயக்குனர்கள் மத்தியில் சர்ச்சைகளில் சிக்கியே பெரும்புகழ் பெற்ற இயக்குனர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அது ராம்கோபால் வர்மா தான் என்பதை அனைவரும் அறிவர். அவர் இயக்கும் படங்களும் சரி, எடுத்துக்கொண்ட கதையிலும் சரி சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. இந்நிலையில் அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் கூட விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பெரும் கண்டனங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ராம்கோபால் “வர்மா வர்மா தோ சரளா ஆண்ட்டி” என்ற படத்தை இயக்கவுள்ளார். இதுவரை அவர் தான் இயக்கிய படங்களில் அவருடைய நிஜப்பெயரை பயன்படுத்தியது இல்லை. இந்த படத்தில்தான் முதன்முதலாக அவருடைய பெயரை டைட்டிலில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் ஒரு முன்னணி தெலுங்கு நடிகை ஒருவரின் இருட்டு பக்கங்களை விவரிக்கும் கதை என படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ள ராம்கோபால் வர்மா, யார் அந்த சரளா ஆண்ட்டி என கேட்டதற்கு படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
















