தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவரின் தன்னிச்சையான தீர்மானத்தை எதிர்த்து உபதவிசாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதந்த கூட்டம் தவிசாளர் க.சிவலிங்கம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்த கூட்டத் தொடருக்கு பிரதேசசபைத் தவிசாளர் வருகை தரவில்லை. வைத்திய தேவை கருதி அவர் வராமையால் அன்றைய கூட்டத்தை உப தவிசாளர் து.ரவி தலைமை தாங்கி நடத்தியிருந்தார். அப்போது ஊழியர்கள் மற்றும் நிதி தொடர்பில் சில தீர்மானங்கள் சபையினால் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. அவை தொடர்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கதைக்கப்பட்ட போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனை மாற்ற வேண்டும் எனவும் தவிசாளர் பிடிவாதமாக நின்றுள்ளார். இதனையடுத்து உப தவிசாளர் து.ரவி, ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.இராஜசேகர், எதிர்கட்சி உறுப்பினர் எஸ்.பிரதீபன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.
ஏனைய உறுப்பினர்கள் தலைவரிடம் இது தொடர்பில் தொடர்ந்தும் விவாதித்தனர். இதனால் குழப்ப நிலை தொடர்ந்தது. இதனையடுத்து மதிய போசனம் எனக் கூறி சபை அமர்வு நிறுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
















