அவர்கள் பெரும்பான்மையினர். எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம் : முதலமைச்சர்

vikineswaran5வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் இன அழிப்பு நடத்துவதற்கு ஆல வட்டம் காட்டப்படுவதாகவே உணர்கின்றேன். “அவர்கள் மிகப் பெரும்பான்மையினர். அதுதவிர பொலிஸ், ஆமி எல்லாம் அவையின் கையில். இதுதான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம்!’ என்கின்ற கோப்பாய் கோமகனின் கூற்று இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

எந்தப் போராட்டத்தையும் உணர்ச்சி வழியில் நடத்திச் செல்வது உசிதமில்லை. எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனக் குறைபாடு எமது சமூகத்தில் இன்றும் உறைந்து போயுள்ளது என்று யாராவது கூறினால் நீங்கள் அதை ஏற்பீர்களோ தெரியாது, ஆனால் உண்மை அதுதான்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம் மிகச் சிறந்த தீர்க்கதரிசி என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வன்னியசிங்கத்துக்கும் அவரது மகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சம்பாசனையை அதற்கு உதாரணம் காட்டினார். சும்மா போனால் பொலிஸ்தான் பிடிக்கும். நாங்கள் ஏன் ஒரு அமைப்பைத் தொடங்கக் கூடாது, அவை அடிச்சால் திருப்பி அடிக்க?” என்று மகள் கேட்டதற்கு தகப்பனார் வன்னியசிங்கத்தின் பதில் இதுதான் “”அவர்கள் மிகப் பெரும்பான்மையினர். தவிர பொலிஸ், ஆமி எல்லாம் அவையின் கையில். இதுதான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப்பார்பினம். உணர்சி மேலீட்டால் பலனில்லை அவர் அன்று கூறிய சொற்களின் முழுத் தாற்பரியத்தையும் ஆயுதப் போராட்டம் சுமந்து வந்துள்ள இன்றைய பேரழிவுச் சோகம் எமக்கு உணர்த்துகின்றது.

எந்தப் போராட்டத்தையும் உணர்ச்சி வழியில் நடத்திச் செல்வது உசிதமில்லை. எதிர்காலம் பற்றிய தீர்க்க தரிசனக் குறைபாடு எமது சமூகத்தில் இன்றும் உறைந்து போயுள்ளது என்று யாராவது கூறினால் நீங்கள் அதை ஏற்பீர்களோ தெரியாது, ஆனால் உண்மை அதுதான். பொறுமையின்மையும் வலோத்கார மனோ பாவமும் விஞ்சிய உணர்ச்சி மேலீடும் எம்மை அழிவு வழியில் இட்டுச் செல்வன என்பதை அன்று அந்தப் பெருமகனார் உணர்ந்திருந்தார். இன்றைய கால கட்டத்துக்கு அவர் போன்ற ஒரு தலைவர் எம்மிடையே வளர வேண்டும், வாழ வேண்டும். தம்பி மாவை (நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா) அத்தகைய தலைவராகத் தரமுயர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். முட்டுக்கட்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன “”போராட்டங்கள் வெற்றிக்காக மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று எமது மக்கள் எண்ணுவதை நிறுத்த வேண்டும். போராட்டம் ஒன்று வெளிப்பார்வைக்குத் தோல்வியாகத் தென்பட்டாலும் அதன் பின்னணியில் எமக்குச் சார்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். எனினும் தடைகளை ஏற்படுத்தி எவ்வாறாவது எம் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வன்னியசிங்கம் கூறிய கூற்றை நாங்கள் இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். “”அவர்கள் பெரும்பான்மையினர். எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம்” என்று அவர் அன்று கூறிய இரு கூற்றுக்களின் உள் அர்த்தத்தைப் பார்த்தோமானால் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் உலகத்தைத் தம் பக்கம் ஈர்த்து எங்கள் இனத்தையே அழிக்கப் பார்ப்பார்கள் என்று அவர் கூறியதாகவும் அர்த்தங் கொள்ளலாம். சர்வதேசமே செவிசாய்த்தது போரின் இறுதிக் கட்டத்தின் போது நடந்ததென்ன? இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என்றார்கள். தமிழர்களுடன் நாங்கள் போர் புரியவில்லை. ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் தான் யுத்தம் புரிகின்றோம். அவர்களை அழிக்க எமக்கு உதவுங்கள். தமிழர்கள் உரிமைகளை முற்றிலும் கொடுப்போம் என்றார்கள். உலக சமூகமே பெரும்பான்மையினர் கூறியதைச் செவி மடுத்தார்கள். போர் முடிந்தால் சமாதானம் ஏற்படும். தமிழ்ப் பேசும் மக்கள் இழந்த தமது உரித்துக்களைப் பெறுவார்கள் என்று காத்திருந்தது சர்வதேச உலகம். என்ன நடந்தது?. எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம் என்ற அவரின் கூற்று தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அபிவிருத்தி என்ற போர்வையில் அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்திக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. திடீரென்று அப்படியானதொரு அபிவிருத்திக் கூட்டத்துக்கு முடிவெடுத்ததன் காரணம் என்ன? இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெற்றிருந்தால், நடைபெற்றுள்ளதாகக் கேள்வி, வட மாகாண சபை வந்ததன் பின்னர் இந்தச் சபையுடன் கலந்தாலோசித்தல்லவா வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற வேண்டும்? இனத்தையே அழிக்கின்றார்கள் அவரின் கட்சியை எமது மக்கள் நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கையில் தான்தோன்றித்தனமாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றைத் தன் தலைமையின் கீழ் ஆயத்தஞ் செய்து வருகின்றது எதற்காக? தாம் நடத்தும் கூட்டத்துக்கு எம்மைப் பார்வையாளர்களாக அழைப்பதின் மர்மம் என்ன? எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்த இருக்கின்றார் ஜனாதிபதி? தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா? அல்லது தன் தாய் மொழியிலா? பல கேள்விகள் பதில் இல்லாமல் இருக்கின்றன. இவையாவும் அவர்கள் பெரும்பான்மையோர்; தவிர பொலிஸ் ஆமி எல்லாம் அவையின்ரகையிலே.

இது தான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம் என்ற கோப்பாய்க் கோமகனின் அக்காலக் கூற்றுக்குள் அடங்கவில்லையா ? அபிவிருத்தி என்ற போர்வையில் இன அழிப்பு நடைபெற ஆல வட்டம் காட்டப்படுவதாகவே நான் உணர்கின்றேன். நடத்தப்படவிருக்கும் இந்தக் கூட்டத்தின் தாற்பரியம் நாடு முழுவதும் நமதே. எம் ஆணையின் கீழ்த்தான் நீங்கள் வாழ வேண்டும். உங்கள் தேர்தல் முடிவுகளைக் காட்டி போர் வெற்றியால் எமக்குக் கிடைத்த உரித்தை நீங்கள் பறித்து விட முடியாது. நாம் பெரும்பான்மையினர். எதுவும் செய்வோம் என்பதல்லவா? இருப்பதைக் கொண்டு மேலும் பெற வேண்டும் எம்முள் பலர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்று கூறுகின்றார்கள். ஒற்றையாட்சியின் கீழ் அச்சட்டம் எமக்கு எதுவுமே அளிக்காது என்கின்றார்கள். என்னையுஞ் சேர்த்துத் தான் கூறுகின்றேன்.

அக் கூற்றுக்களை மறுப்பதற்கில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசு முற்றாகக் கை வாங்கியிருந்தால் எங்கள் நிலை மிகவும் இக்கட்டான ஒரு கட்டத்துக்குப் போயிருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு இன்னும் வேண்டும் என்று கோருவதே இருப்பதையும் இல்லாதாக்கிவிட்டு இளிப்பதிலும் பார்க்கத் தந்திரோபாயமிக்கது என்பதை எமது மக்கள் உணர வேண்டும். ஓர் இனம் தனது தனித்துவத்தைப் பாதுகாத்து கலாச்சாரப் பாரம்பரியங்களோடு தொடர்ந்து வாழ்வதற்கு அதற்குப் பாரம்பரிய நிலம் தேவை. அவ்வாறான எமது வட கிழக்கு மாகாணங்களில் எங்கள் நிலத்தை எவரேனும் பிடுங்கி விட்டால் எமது அடையாளமே தேய்ந்து கரைந்து போகும். தமிழர்களை விரட்டுகின்றனர் தமிழர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நிலம் வாங்கலாம், குடியிருக்கலாம் ஆனால் சிங்களவர் வடகிழக்கில் குடியிருக்கக்கூடாது என்று கூறுவது என்ன நியாயம் என்று கேட்கின்றார்கள். இதைத் தமிழர்கள் சிலரும் முக்கியமாகக் கொழும்பில் வாழ் தமிழர்கள் சிலரும் கேட்கின்றார்கள். பல கலவரங்களின் போது தெற்கில் வாழ்ந்து வந்த தமிழர்கள் மிகப் பெருவாரியாக அங்கிருந்து அடித்துத் துரத்தப்பட்டு விட்டார்கள்.

அங்கிருந்த அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் அங்குள்ளவர்கள். இவ்வாறிருக்க இன்று இராணுவத்தை வடகிழக்கில் நிலை நிறுத்தியுள்ளார்கள். இந்தச் சூழலில்த்தான் மேற்படி கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது தெற்கிலிருந்து தமிழர்களை விரட்டி அடித்து விட்டோம், வடகிழக்கில் இருந்து அவர்களை விரட்டி அடிக்கச் சிங்களவர் பெருவாரியாக வந்து இங்கு குடியிருந்தால் என்ன என்று கேட்காமல் தமது கேள்வியை நியாயமான கோரிக்கைபோல் கேட்கின்றார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply