கொழும்பில் செப்டம்பர் 18 முதல் 21ம் நாள் வரை நடைபெறும் ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க பாஜக சார்பில் முரளிதர் ராவும் மற்றும் அக் கட்சியின் வெளியுறவுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலியும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொளவதற்கு தமிழகத்தில் வைகோ உட்பட பலரிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பிலுள்ள பாஜக உறுப்பினர்களை உடனடியாக இந்தியாவிற்கு திருப்பி அழைக்கவேண்டும் என வலுயுறுத்தப்பட்டது. இவைகளுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் முரளிதர் ராவ் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
முரளிதர் ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற உடனேயே இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை இலங்கை அரசு ஏற்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.
அதன் பொருட்டு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையின் அரசியல் சாசன கட்டமைப்புக்கு உள்பட்ட சமவுரிமை, மதிப்பு, நீதி, சுய மரியாதை ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இதை இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், எங்கள் இலங்கைப் பயணத்தை பயன்படுத்தி வருகிறோம் என அவர் நியாயம் கற்பித்துள்ளார்.
















