என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் புரட்சிக்கு தயார்ப் படுத்தப்பட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகின்றேன். நான் வாழுகின்ற மண்ணில் – இந்தத் “தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் இந்தப் புரட்சிக்கு தயாராக வேண்டும். நான்உயிருக்கு உயிராக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவருமே பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் தன் சாவின் இறுதிக் கணத்தில் அனைத்து அவயவங்களும் செயலிழந்து மரண படுக்கையில் துடித்த பொழுதில் உச்சரித்த வாசகங்கள் இவை.
தமிழீழ விடுதலையை நோக்கிய போராட்டம் இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பொழுதுகளில் அதனை தன் தோள் மீது சுமந்த மாபெரும் தியாகி லெப். கேணல் திலீபன். ஒரு ஆயுதப் போராளியிடம் இயல்பாக இருக்கும் போர் மீதான காதலுக்கு அப்பால் அகிம்சை மூலமும் போராட்டத்தை நடத்த முடியும் அன்று தன் சாவினால் சரித்திரம் எழுதிப் போனவன் திலீபன்.
அந்தத் தியாகி பற்றிய நினைவுகள் தமிழ் மண்ணில் வாழும் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் வேரூன்றி இருக்கிறது. திலீபன் தன் தேகம் நீங்கி 27 ஆண்டுகளை தொட்டு நிற்கின்ற இந்தப் பொழுதுகளில் அவரின் நினைவுகளை தாங்கி வாழ வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் மலையாக நம்பிய விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலில் மாபெரும் அவலத்தை சந்தித்து ஆயுதங்களை மெளனமாக்கிப் போயிருக்கின்ற இந்தப் பொழுதில் திலீபன் பற்றிய நினைவுகளையும் அவர் ஆழமாக நேசித்த புரட்சி பற்றிய கற்பிதங்களுமே மக்களுக்கு எஞ்சிக்கிடக்கும் நம்பிக்கைகள்.
புலிகளின் தலைவர் அடிக்கடி பின்வரு ம் வார்த்தைகளை அடிக்கடி உச்சரிப்பார். “”ஒருவன் வீரனாக இருந்தால் அவன் கொள்கைக்காக செத்திருக்க வேண்டும். அல்லது கொள்கையை அடைந்திருக்க வேண்டும்” அந்த வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவன்தான் திலீபன். ஒரு ஆயுதப் போராளியாக, பின் அரசியல் போராளியாக உருவெடுத்த திலீபன் உண்மையில் ஒரு மருத்துவ பீட மாணவன். ஆனால் காலத்தின் தேவை கருதி தன் மருத்துவப் படிப்பை உதறி விட்டு மக்களுக்காக களத்தில் குதித்தவன் அவன். 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரான் தேரோடும் வீதியிலே ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தொடக்கிய பட்டினிப்போர் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுத்தது.
அவர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் அவற்றின் தேவையை நடைமுறை ரீதியாகக் கோரி நிற்கின்றன.
திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள்
01. மீள்குடியமர்த்தல் என்ற போர்வையில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
02.சிறைக் கூடங்களிலும் இராணுவப் பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
03.அவசர கால சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.
04. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக நிறுவப்படும் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்திய ஆதிக்க அரசு போர்த்திருந்த அமைதிப்படை என்ற முகத்திரையை கிழித்தெறிந்து அது உண்மையில் அமளிப் படை என்பதை திலீபன் தன்னுடைய அகிம்சைப் போரின் மூலம் அகிலத்துக்குப் போதித்தான்.
திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன். பிறப்பிடம் யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்ற கிராமம். 27.11.1963 ஆம் ஆண்டு அவனின் பிறப்பெடுத்தல் நிகழ்ந்தது. சிறுவயது முதலே படிப்பிலும் விளையாட்டிலும் சரியான சுட்டி திலீபன். எல்லோரிடமும் அன்பும் பாசமுமாகப் பழகும் குணம் சிறுவயதில் இருந்தே திலீபனிடம் ஊறியிருந்தது. உயர்தரப் பரீட்சையை முடித்து பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்தான் திலீபன்.
ஆனாலும் சிங்கள அரச பயங்கரவாதம் அவரின் எதிர்காலக் கனவுகளை வளர்க்க இடம்கொடுக்கவில்லை. தரப்படுத்தல் மாணவர்களை வாட்டியயடுத்தது. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை போன்ற போராளிகள் கண்கள் தோண்டி கைகால்கள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திலீபனின் மனதில் ஆத்திரத் தீயை மூட்டியது. இந்த நிலையில் தான் திலீபனுக்காக மருத்துவபீடம் தன் வாசலை திறந்து வரவேற்றது. தன் எதிர்காலம் வைத்தியராகி சொகுசான வாழ்வா? அல்லது மக்களுக்காக போராடும் வாழ்க்கையா? எனத் தீர்மானிக்கும் சூழ்நிலைக்கு திலீபன் தள்ளப்பட்டான்.
மக்களுக்கான அவனுடைய அர்ப்பணிப்பு மருத்துவப் படிப்பை உதற வைத்தது. புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் போராளியாக மாறிய திலீபன், தன்னுடைய திறமையாலும் , அறிவுக் கூர்மையாலும், பேச்சாற்றலாலும் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக குறுகிய காலத்துக்குள்ளேயே உயர்ந்தான். இந்த நிலையில் தான் தமிழர்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளிலிருந்து தப்புவதாக நினைத்து இந்தி அமைதிப்படையில் ஆக்கிரமிப்புக் கரங்களில் சிக்கியிருந்தார்கள். எனவே காந்திய தேசத்துக்கு அகிம்சை என்றால் என்னெவன கற்பிக்க கங்கணம் கட்டினான் திலீபன்.
“நான் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என்று தலைமைக்கு விண்ணப்பித்தான். அனுமதியும் கிடைத்தது. நல்லூரான் வீதியில் தொடங்கியது யாகம் .தன் தேகத்தை ஆகுதியாக்கி எரிந்து கொண்டிருந்தான் திலீபன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவயவங்களாக செயலிழந்து கொண்டிருந்தன. அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கே நித்திரையை விட்டு எழும்பியிருந்தான் திலீபன். அவன் முகம் சோகமாகக் காணப்பட்டாலும் அதை யாரிடமுமே வெளிக்காட்டவில்லை. சகல பத்திரிகைகளையும் ஒன்றும் விடாமல் வாசித்து முடித்தான். புலிக்கொடியை தாங்கியபடி இரவு பகலாக தமிழர் பிரதேசத்தில் அனைத்துப் பகுதியிலும் இருந்தும் மக்கள் வெள்ளம் மாட்டு வண்டில்கள் , வாகனங்கள் என்பவற்றில் வந்திறங்கிய வண்ணமிருந்தது. மேடை நிகழ்வுகளுக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் தேவர் தலைமை தாங்கியிருந்தார். தமது கவிதைகளை மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று மேடையின் நாலா புறத்திலும் மாணவர்கள் முண்டியத்தனர். அப்போது தேவரை அழைத்து காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தான் திலீபன் .
“நான் பேசப் போறேன் மைக்கை வாங்கித் தாங்கோ” என்று நாத்தளதளக்க தேவரிடம் கேட்டான் திலீபன். “” நீங்கள் சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறீங்கள். களைத்து விடுவீர்கள்” என தேவர் தடுக்க முயன்றார். “”இரண்டு நிமிடம் தான் பேசுவேன். நீண்ட நேரம் பேசாமல் நிப்பாட்டி விடுவன் .வாங்கித் தாங்கோ ” இரண்டு நிமிடம் என்ற நிபந்தனையுடன் திலீபனின் கைகளுக்கு “மைக் ‘ பரிமாறப்பட்டது. திலீபன் பேசப்போகிறார் என்ற அறிவிப்பு மக்கள் மனதில் உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கியது. பேசத்தொடங்கினான் திலீபன். “”எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே! அனைவருக்கும் வணக்கம் . நான் நின்று கொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் அமர்ந்தபடி பேசுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ இல்லையோ என எனக்குத் தெரியாது. அதனால் தான் இன்று உங்களுடன் பேச விரும்பினேன் .
நாம் அனைவரும் எமது இலட்சியத்தில் உறுதியோடு இருக்கிறோம் . இதுவரை சத்திய யுத்தத்தில் 650 தோழர்களை இழந்திருக்கிறோம். மில்லர் லொறியில் ஏறி போக முதல் கடைசியாக என்னிடம் ஒரு வரி கூறினார் “”நான் தாய் நாட்டுக்காக உயிர் துறப்பதை என்னும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். இந்த மக்கள் விடுதலை அடைவதை எனது கண்களால் பார்க்க முடியாது என்பதே எனது ஏக்கம்” என கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான். நான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன் தலைவரிடம் அனுமதி கேட்ட போது அவர் கூறிய வார்த்தை இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. “”திலீபா ! நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் ” என்றார். அப்படி ஒரு மகத்தான தலைவரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் நீங்கள் அலையாக அணி திரளுங்கள். ஒரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயம் தமிழீழத்தை எமது மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தரும்.
இதனை வானத்தில் இருந்து நானும் எனது தோழர்களும் சேர்ந்து பார்த்து மகிழ்வோம். உங்களிடம் இருந்து ஆத்மார்த்தமாக விடைபெறுகிறேன்” இந்த உரை நிகழ்ந்து எட்டாவது நாள் திலீபனின் உயிர் இந்த பூவுலகை விட்டு பிரிந்தது. ஒரு மாபெரும் வீரனின் அந்த மரணம் தான் தமிழ்த் தேசத்தின் ஆன்மாவைத் தட்டியயழுப்பி ,இந்தியப் படைகளுக்கு எதிராகவே ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதங்களை சுமப்பதற்கான ஓர்மத்தை உருவாக்கியது. இந்திய அரசாங்கம் போர்த்திருந்த காந்தியம் என்ற முகத்திரை கிழிந்து அதன் கோர முகம் வெளிப்பட்டது. ஆயுதப் போரில் மட்டுமல்ல அகிம்சைப் போரிலும் தமிழர்களே வல்லவர்கள் என்பதை உணர்த்தி விட்டுப் போன திலீபனின் திருவுடல் அவனின் விருப்பப்படி, யாழ் மருத்துவ பீட மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது. திலீபன் மறைந்து 27 வருடங்கள் சென்ற பின்னும் அவனது ஆன்மா இன்னமும் அதிகாரத்தை பயம் கொள்ள வைத்தே வருகிறது.
அதனால் தான் நல்லூரில் தேகம் நீங்கியவனின் வித்துடலை இப்போதும் முள்ளிவாய்க்காலில் சல்லடை போட்டு தேடுகின்றன பேரினப் படைகள். மாவீரர்கள் இறப்பதில்லை. அவர்கள் விதைக்கப்படுவதால் காலம் தோறும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
















