வடக்கு கிழக்கை மீள இணைப்பதன் மூலம் பாரியளவு பண விரயத்தை தடுக்க முடியும் – TNA

suresh-premachandran1வடக்கு கிழக்கு மாகாணசபைகளை ஒன்றிணைப்பதன் மூலம் பாரியளவு பண விரயத்தை தடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக ஒரே நிர்வாக அலகாக இயங்கி வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி கட்சி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்தது எனவும், வடக்கு கிழக்கை மீள இணைப்பதற்கு பாராளுமன்றில் சட்டமொன்றை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக நிலங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் ஒரே நிர்வாக அலகின் கீழ் நிர்வாகம் செய்யப்படுவதனையே விரும்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்தின் பின்னர், கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலான சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டதாகவும் இதனால் சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் உறுதி செய்து கொள்ள இவ்வாறு ஒரே நிர்வாக அலகு அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009ம் ஆண் யுத்த நிறைவின் பின்னர் வடக்கில் பாரியளவில் சிங்கள குடியேற்றறங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தகவல்களின் அடிப்படையில் யுத்தத்தின் பின்னர் 20000 சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் சனத்தொகைப் பரம்பலை மாற்றியமைத்து தமிழ் மக்களை சிறுபான்மையினத்தவர்களாக மாற்றும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதி உள்ளிட்ட பல்வேறு இழப்புக்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இரண்டு மாகாணங்களையும் தனித்தனியாக பேணுவதன் காரணமாக பாரியளவில் நிர்வாக செலவுகள் ஏற்படுவதாகவும் இந்த செலவுகளை தவிர்க்க ஒரே மாகாணமாக இணைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கினை மீள இணைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் இன்றி அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

காணி, காவல்துறை அதிகாரங்கள் மட்டுமன்றி பௌதீக மற்றும் நிதி வழங்களும்அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் மாகாணசபைகளை தனக்கு தேவையான வகையிலேயே வழிநடத்தி வருவதாகவும், தேவை ஏற்பட்டால் ஆளுனரைக் கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை அரசாங்கம் முடக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply