உகாண்டா நாட்டு பெண்ணை, தமிழக வாலிபர் ஒருவர் காதலித்து கரம்பிடித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மற்றும் ராதா தம்பதியினர் விளாப்பாக்கத்திலேயே ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் கலாநிதி (30). ‘லெதர் டெக்னாலஜி’ மற்றும் ‘பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன்’ படித்தவர். இவர் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதியன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
ஆனால், வேலைக்கு சென்ற இடத்தில் மொழி, வேலை மற்றும் உணவு பழக்கவழக்கங்களும் பிரச்சினையாக இருந்துள்ளது. எனவே, வேலைக்கு சென்ற ஒரு வார காலத்திலேயே கலாநிதி தனது சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
அப்போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உகாண்டாவை சேர்ந்த ஓ.இசன்யூஆரியட் என்ற பெண்ணுடன் கலாநிதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கலாநிதிக்கு, இசன்யூ ஆரியட் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
நாளடைவில் அவர்கள் இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களின் காதலை இசன்யூஆரியட்டின் பெற்றோர்களான ஓரிட் பேசில் எமெயூ, ஓரிட் பேசில் எமெயூ அனேகிரேஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து கலாநிதி- இசன்யூ ஆரியட் திருமணத்திற்கு இசன்யூஆரியட்டின் பெற்றோரும், சகோதரிகள் சோப்பீ, சாண்தா, ஸ்ட்ரேசி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலாநிதியின் பெற்றோரும் இந்த காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இசன்யூ ஆரியட் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கலாநிதியை திருமணம் செய்து கொள்ள விளாப்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஆற்காட்டை அடுத்த விலாரி கிராமத்தில் சொக்கநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி (மேளம் மட்டும் தவிர்த்து) கலாநிதி- இசன்யூ ஆரியட் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மணமகன் கலாநிதி பட்டு வேட்டி- சட்டையும், மணமகள் இசன்யூஆரியட் கூரப்புடவையும் அணிந்திருந்தனர். மணமகன் கலாநிதி, மணமகள் இசன்யூ ஆரியட் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் ஆன தாலியை கட்டினார். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் அனைவரும் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து கலாநிதி கூறியதாவது, திருமணத்திற்கு பின்னரும் மணமக்கள் உகாண்டா செல்லாமல் இங்கேயே வசிக்கப் போவதாகவும், இசன்யூ ஆரியட்டிற்கு ‘கிரீன்கார்டு’ எனப்படும் குடியுரிமை பெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
















