வடமாகாணசபைக்கு எதிராக அறிக்கைகள்… – விந்தன் சாட்டை!

vinthan5ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜீ சனசமூக நிலையத்தின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜீ விளையாட்டுக் கழகமும் காந்திஜீ சனசமூக நிலையமும் இணைந்து 21.09.2014 அன்று நடாத்திய தீவக பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தனது சிறப்புரையில் தெரிவித்ததாவது
யாழ் தீவுப்பகுதி என்பது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு குறிப்பிடத்தக்கோரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப்பகுதியில் தீவகத்தில் விளையாட்டுத்துறை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல கல்வி வளர்ச்சி பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாய் இருந்தது. இவைகள் ஏன் ஏற்பட்டது என்பதற்கு எங்களால் பல காரணங்கள் கூறமுடியும்.

இந்நிலையில்தான் கடந்த வருடம் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு தமிழ் மக்கள் பேராதரவினை தந்திருக்கின்றார்கள். தீவக மக்களாகிய நீங்களும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் பேரெழுச்சி கொண்டு எம்மை ஆதரித்திருக்கின்றீர்கள்.
நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு தீவகப்பிரதேசத்திற்கு நாங்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் பிரதேச நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு அரசதரப்பும் அரச ஆதரவு குழுக்களும் எமக்கு பல்வேறு விதத்திலும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றது. மத்திய அரசால் இந்த வருடத்திற்கான வடமாகாணசபைக்கான நிதியாக 5831(ஜந்தாயிரத்து எண்ணுற்று முப்பத்தி ஒரு மில்லியன் ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி மூலதனச் செலவுக்கும் மீண்டு வரும் செலவீனத்திற்குமானதாகும். இந்நிதியை மத்திய அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்தோ அல்லது உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தோ உதவியாக அல்லது கடனாக பெற்றிருக்கலாம். அல்லது மத்திய திறை சேரியில் இருந்த மக்களின் வரிப்பணமாகவும் இருந்திருக்கலாம். மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான 5831 மில்லியனி;லிருந்து மாகாணசபையை பொறுப்பேற்றுள்ள மக்கள் பிரதிநிதியாகிய எமக்கு வழங்கப்பட்ட நிதி 1876 மில்லியன் (ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தாறு மில்லியன்);. மிகுதி 3955 (மூவாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்திஐந்து மில்லியன்); ரூபாவை வடக்கு மாகாண ஆளுனர் தன்வசம் வைத்துள்ளார். ஆளுனர் அவர்கள் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்நிதியினை பயன்படுத்துகின்றார். இருபத்தி ஐந்து வருடமாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் இருந்த வடக்கு மாகாணம். முப்பது வருடம் போரை சந்தித்த மாகாணம். பெரும் உயிர் சேதங்களையும் பெரும் உடமை இழப்புகளையும் சந்தித்த மக்களுக்கும் பிரதேசத்திற்கும் இந்நிதி யானைப்பசிக்கு சோளப்பொரிதானே!
இந்த லட்சணத்தில் அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்குதான் அதிக நிதி ஒதுக்கியதாக பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

இன்றுடன்; வடக்கு மாகாணசபையை நாங்கள் பொறுப்பெடுத்து ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருடத்தில் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது என அறிக்கைகள் விடுகின்றார்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டிகளையும் ஒட்டுகின்றார்கள். மாகாணசபையில் முதல்வர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு வருடமொன்றுக்கு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியாக முதல்வருக்கு ஆறு மில்லியன் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து மில்லியன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு மில்லியன்படி நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்நிதி ஊடாக மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான சுயதொழில்களுக்கான உதவிகள் மாகாணத்தில் உள்ள வீதிகள் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் முன்பள்ளிகள் இந்து ஆலயங்கள் தேவாலயங்கள் மருத்துவமனைகள் கல்வி வளர்ச்சி இன்னும் இது போன்ற எத்தனையோ விடயங்களுக்கு நாம் நிதி ஒதுக்கி நாட்டுக்கும் மக்களுக்கும் எம்மால் முடிந்த சேவையை செய்து வருவதோடு மாகாண நிதி நியதிச்சட்டம் முத்திரை வரி கைமாற்றுச் சட்டம் போன்றவை பெரும் இழுபறியின் பின்பு ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இதிலிருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தியும் மக்களுக்கும் நாட்டுக்கும் எம்மால் சேவை செய்ய முடியும். அடுத்ததாக முதல்வருக்கான நிதி நியதிச்சட்டம் இச்சட்டம் ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணசபையில் நடைமுறையிலிருந்தது. தற்பொழுது ஊவா சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களிலும் அமுலில் இருக்கின்றது. இருந்தும் வடக்கு மாகாணத்தில் மட்டும் இதற்கு தடைவிதிக்கின்றார்கள். முதல்வருக்கான நிதி நியதிச்சட்டம் வடக்கிலும் அமுல்படுத்தப்பட்டால் புலம்பெயர் வாழ் உறவுகள் உள்ளுர் நலன்விரும்பிகள் தொண்டு நிறுவனங்கள் இன்னும் பல நாடுகளும் எமக்கு நிதி வழங்க முன்வந்திருக்கும். இந்நிதியூடாகவும் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கும் உதவியிருக்க முடியும். இன்று இவற்றுக்கு தடைவிதித்தவர்களே எம்மைப்பார்த்து ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். கேள்வி எழுப்பும் இத்தகையோரை மக்கள் நன்கு அறிவார்கள் புரிவார்கள்.
தீவகத்தில் கூட்டமைப்பினராகிய எம்மை ஏதாவது ஒரு பொது நிகழ்வுகளுக்கு இங்குள்ளவர்கள் அழைத்தால் உடனே ஒரு கும்பல் சென்று அவர்களை நோக்கி யாரைக்கேட்டு அழைத்தீர்கள் இவர்களை எல்லாம் நீங்கள் அழைக்கக்கூடாது எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களைத்தான் அழைக்க வேண்டும் என கடுந்தொனியில் எச்சரிக்கின்றார்கள். இவர்களின் இத்தகைய செயல் ஜனநாயக மரபுகளை மீறும் செயல் மட்டுமல்ல அரசியல் பண்பும் நாகரீகமும் தெரியாதவர் மேற்கொள்ளும் செயலாகும். எமக்கு எதிராக அறிக்கைகள் விடலாம் சுவரொட்டிகள் ஒட்டலாம் இந்தச் சலசலப்புகளுக்கு எல்லாம் நாம் அஞ்சப்போவதில்லை. மக்களும் இதை கண்டுகொள்வதுமில்லை கணக்கெடுப்பதுமில்லை. நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நெருப்பாற்றை கடந்து வந்தவர்கள்;. மக்களுக்கான எமது பணியினை கண்டு ஜீரணிக்க முடியாதவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியும் அறிக்கைகள் விட்டும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தலாம் ஆனால் மக்களுக்கு எம்மை பற்றியும் தெரியும் ஒட்டித்திரிந்து பிழைப்பு அரசியல் நடத்துபவர்களையும் நன்கு தெரியும். அரசியலில் இருப்பவர்களுக்கு பணிவும் பக்குவமும் நிதானமும் பொறுமையும் நீதியும் நேர்மையும்; தெளிந்த சிந்தனையும் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் இல்லாதவர்கள் இப்படித்தான் புலூடா அரசியல் செய்வார்கள். இது எமக்கு ஒரு பொருட்டல்ல எங்கள் பணி தொடரும் எச்சக்தியாலும் இதை தடுத்து நிறுத்திவிட முடியாது என்றார்.

இன்றைய பரிசளிப்பு விழாவுக்கு விளையாட்டுக்குழுத் தலைவர் அ.கனகையா தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உபதலைவர் அல்பிரட் – தீவக உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் பீற்றர் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர் அத்தோடு வெற்றியீட்டிய வீரர்களுக்கு விருந்தினர்கள் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் கிராமசேவையாளர் -கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் – கிராம அபிவிருத்திச் சங்கம் – கடற்தொழில் கிராமிய அமைப்பு – சிறீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை – காந்திஜீ நாடக மன்றம் – மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags: ,

Leave a Reply