முல்லையிலும் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்

mullaiகடற்படையினரின் தேவைக்கு என சுவீகரிக்கப்படவிருந்த முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி அளவீடுகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – பரந்தன் ( ஏ 35) வீதியில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைக்கு என அளவீடு செய்யும் நோக்கில் இன்று காலை 9 மணியளவில் நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.

எனினும் அங்கு கூடியிருந்த காணி உரிமையாளர் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பலரது எதிர்ப்பை அடுத்து நில அளவீடு நிறுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவிக்கையில்,

வட்டுவாகல் பாலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 617 ஏக்கர் காணியை பிரதான கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்படையினரின் தேவைக்கு பொதுமக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன என கடந்த யூன் மாதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் கையொப்பமிட்ட துண்டுப்பிரசுரங்கள் பகிரங்கமாக ஒட்டப்பட்டு இருந்தன.

அதனையடுத்து காணி உரிமையாளர்களாகிய நாம் அனைவரும் காணிக்குரிய உறுதிகள் , காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் எங்களுடைய காணி என அடையாளப்படுத்தக் கூடிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தோம்.

அத்துடன் இது எங்களுடைய பரம்பரையான காணி இதனை நாம் கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் கடிதம் மூலம் தெரிவித்தோம்.

எனினும் கடந்த 18 ஆம் திகதி குறித்த காணியியை அளவீடு செய்வதற்கு தாங்கள் இன்று காலை 9 மணிக்கு வரவுள்ளதாக நில அளவைத்திணைக்களம் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று காணியை அளவீடு செய்ய வந்த நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இது எங்களுடைய பரம்பரை சொத்துக்கள், இவை மிகவும் பயனுள்ள காணிகள் இவற்றை அளக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தோம்.

எனினும் இது நில அளவைத் திணைக்கள நாயகத்தின் அறிவுறுத்தல்என்றும் அதனை நாங்கள் செய்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தனர். இருப்பினும் நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தொடர்ந்தும் அளக்கச் சென்றால் பின் தொடர்வோம் எனவும் தெரிவித்தோம்.

அதனையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொறுப்பான நில அளவை திணைக்களத்தின் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடியதையடுத்து குறித்த காணி உரிமைகள் தங்களுடைய காணிகள் அளவீடு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து தனித்தனிய கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டது.

அதனையடுத்து காணி உரிமையாளர்கள் 23 பேரும் கடிதம் மூலம் குறித்த காணிகள் எங்களுடைய பதிவில் இருக்கின்றன என்றும் எக்காரணம் கொண்டும் இதனை சுவீகரிக்க விட மாட்டோம் என்ற எங்களது கருத்தை தெரிவித்து முல்லைத்தீவு நில அளவைத்திணைக்கள காரியாலயத்தில் சமர்ப்பித்தோம்.

இருப்பினும் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் முல்லைத்தீவில் கடற்றொழில் செய்ய வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த 4 பேருக்கும் குறித்த பகுதியில் காணிகள் இருக்கின்றது.

அதன்படி அவர்களும் இன்று கலந்து கொண்டனர். அவர்களில் இருவர் தமது காணியை கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்கு வழங்குவதற்கு சம்மதித்ததையடுத்து அவர்களது காணிகள் அளவீடு செய்யப்பட்டன.

மேலும் குறித்த காணிகளில் ஒருவர் தற்போது சீனகாரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதனால் சீன காரரும் இன்று கலந்து கொண்டு தனது காணியை கடற்படைக்கு விட்டு கொடுக்க சம்மதித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்ப்பு நடவடிக்கையில் மக்களுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பினையும் வெளியிட்டனர்.

Tags: , ,

Leave a Reply