வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி முன்பாக உள்ள அங்காடி வியாபார நிலையத்தில் மீன் சந்தை அமைக்க வவுனியா நகரசபை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புக்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரப் பகுதியில் உள்ள சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள அங்காடி வியாபார நிலையப் பகுதியில் மீன் சந்தையினை அமைப்பதற்கு வவுனியா நகரசபை வேலைகளை ஆரம்பித்துள்ளது. அக் காணியானது வவுனியா பொழுது போக்குக் கழகத்திற்குரிய காணியாகும் அக் காணியானது அங்காடி வியாபாரிகளுக்கு வியாபார நிலையம் அமைக்க என பொழுது போக்கு கழகத்திடம் இருந்து நகரசபை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொண்டது. ஆனால் பொழுது போக்கு கழகத்தின் அனுமதி இல்லாது இவ் மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.
வவுனியாவில் பல இடங்கள் இருந்தும் வவுனியாவில் உள்ள ஒரு சைவசமயப் பாடசாலை முன்னால் மீன் சந்தையை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பொது அமைப்புக்கள் பல தெரிவித்துள்ளன. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்ற பாடசாலை சூழலையும் மாசுபடுத்தும் செயற்பாடாக இது அமைவதுடன் சைவ சமயத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது எனவும் அம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் வவுனியா பொழுது போக்கு கழகம், அந்தணர் ஒன்றியம், வரியிறுப்பாளர் சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் எனப் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
















