தாய் பிச்சை எடுக்க குத்தியன் கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம் தமிழில் இப்படி ஒரு பழ மொழி உண்டு.
செய்ய வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் ஆடம்பரத்துக்காகவும் தம்மைப் பற்றிப் பிறர் பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் பற்றி இந்தப் பழ மொழி நையாண்டி செய்கிறது. இலங்கையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்தப் பழ மொழிகளை நினைவு படுத்துவதில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை. இருபத்தியயாரு வருடங்களின் பின்பு சீன ஜனாதிபதி ஒருவர் முதன் முதலாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அதே வேளையில் மஹிந்த ராஜபக் தான் பதவி வகிக்கும் ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் எழு தடவைகள் சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். சீன ஜனதிபதியின் இலங்கைப் பயணத்தின் போது 2 ஒப்பந்தங்கள் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையே கைச்சாத்திடப்பட்டன. இவற்றில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை ஆரம்பித்து வைப்பது, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாம் கட்டம் இன்னும் சரிவர வெற்றியளிக்கவில்லை. அந்த மின் நிலையம் அடிக்கடி பழுதடைந்து இருநூறுக்கும் மேற்பட்ட தடவைகள் திருத்தப்பட்டுச் சாதனை படைத்துள்ளது. அதே நிலையில் தான் இரண்டாவது திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு துறைமுக நகர நிகழ்ச்சித் திட்டம் 13 பில்லியன் டொலர் சீன உதவியுடன் உருவாகவுள்ளது. ஆசியாவின் ஆச்சரியத்தில் இதுவும் ஒன்று.
அந்தத் திட்டத்தின் மூலம் கடலுக்குள் 500 ஏக்கர் நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு ஒரு புதிய நகரம் உதயமாகவுள்ளது. இதில் பிரமாண்டமான சுற்றுலா விடுதிகள், நீச்சல் தாடாகங்கள், பூங்காக்கள் எனப் பல்வேறு விதமான ஆடம்பர பொழுது போக்கு மையங்கள் உருவாக்கப்பட்டவுள்ளன. இது சீனாவுக்கு எத்தçனை ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படும் என்ற தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்கள். சீனரின் குடுமி மட்டும் சும்மா ஆடி விடுமா? எப்படி இருப்பினும் மஹிந்த சிந்தனையில் அபிவிருத்தியின் ஒரு அம்சமாகவும், பாதுகாப்புச் செயலரின் கனவுலகின் ஒரு மெய்ப்பாடாகவும் கடலுக்குள் ஒரு ஆடம்பர நகரம் உருவாகவுள்ளது. கொழும்பில் கடலுக்குள் நகரம் உருவாகும்மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படும் அதே வேளையில் வடக்கில் கடலலையை நகருக்குள் கொண்டு வரும் இன்னொரு பிரமாண்டமான அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை உள்ளூர் தேவைகளை ஈடு செய்யும் நோக்குடன் ஒரு சிறிய தொழிற்சாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணக்கல்லையே பெற முடியும். திட்டமற்ற முறையில் பெருமளமவு சுண்ணக்கல் அகழப்பட்டால் கடல் நீர் உட்புகுந்து யாழ். குடாநாட்டு நிலக்கீழ் நீர் வளத்தையே உவராக்கி விடும் அபாயம் உண்டு. எனவே மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தியை மேற்கொள்ளும் அளவிலேயே அந்த ஆலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பிரமாண்டமான உற்பத்தியை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறைச்சிமெந்து தொழிற்சாலை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது.
இது மிகப் பெரும் தொழிற்சாலையாக விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே இந்த தொழிற்சாலையின்இராட்சத தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் பலன் எமது பிரதான மூல வளமான சுண்ணக்கல் வளம் முற்றாக அழிக்கப்படுவதுடன் கடல் நீர் உட்புகுந்து நிலக்கீழ் நீரை உவராக்கி விடும். அதே வேளையில் நாகர்கோவில் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முறையற்ற மணல் அகழ்வும் கடல் நீரை உள்ளே கொண்டு வரும் சாத்தியங்கள் உண்டு. அங்கு அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு நிபுணர்களால் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயும் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் வகையிலும் மணல் அள்ளப்படுகின்றது. இதன் பலன் கடல்நீர் உட்புகுந்து கொள்ளும் அபாயகரமான சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக கடல் நீர் நிலக்கீழ் நீரோட்டம் மூலம் தொண்டமனாறு நீரேரியில் கலக்கும் நிலை ஏற்படும்.அதன் பாதிப்பு வடமராட்சி பகுதிகளில் உள்ள நன்னீர்க் கிணறுகள் யாவும் உவர் நீராகி விடும். தெற்கில் கடலுக்குள் நகரம் உருவாக்கப்படுகிறது. ஆனால் வடக்கிலோ நகரங்களுக்குள் கடல் உட்புகப் போகிறது. இதற்குக் கூறப்படும் அழகான பெயர் அபிவிருத்தி. இந்த அபிவிருத்தி காரணமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறுமெனவும், ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய அபிவிருத்திகளால் அரசாங்கத்துக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அதே வேளையில் பலருக்கு தற்போது ஆதாரமாக இருக்கும் சுய தொழில்கள் அழிந்து போகும். ஆழமாகச் சிந்தித்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் இவற்றால் கிடைக்கும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் என்பது புலப்படும். இன்று இலங்கையின் வடபகுதியிலும், கிழக்கிலும் ஏராளமான மக்கள் குடியிருக்க வீடுகளின்றி கூடாரங்களிலும்,குடிசைகளிலும், அகதி முகாம்களிலும் வசித்து வருகின்றனர். சுனாமியால் வீடுகளை இழந்தவர்களில் பலர் கூட இன்றும் மீள் குடியேற்றப்படவில்லை. மலையக மக்களில் பெரும் பகுதியினர் இன்றும் “லயன்’ என்று சொல்லப்படும் புறாக்கூடுகளிலேயே வசித்து வருகின்றனர். இப்படியான நிலையில் தான் கோடிக்கணக்கான பணம் சீனாவிடமிருந்து கடனாகப் பெறப்பட்டு கடலுக்குள் ஒரு நகரம் அமைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளையும், அவர்களால் கிடைக்கக் கூடிய அந்நியச் செலாவணியையும் இலக்கு வைத்தே இந்தக் கடல் நகரம் அமைக்கப்படுகிறது. அந்த அந்நியச் செலாவணியில் ஒரு பகுதி கூட சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருள்களுக்குப் போய்விடும். நேரடியான வேலை வாய்ப்புகளும், மறைமுகமான சில வேலைவாய்ப்புகளும் கிட்டும் எனக் கூறப்படுகின்றது.
இந்த மறைமுக வேலை வாய்ப்புகளில் விபசாரம்,சிறுவர் பாலியல்துஷ்பிரயோகம் என்பன முக்கியமானவையாகும். சிலவேளைகளில் இளநீர் விற்கும் தொழில் வாய்ப்புகளும் உருவாகலாம். சிங்கள பெளத்த கலாசாரம் பற்றித் தம்பட்டமடிக்கும் பிக்குகள் கூட இவ்வாறு பாலியல் தொழில் வளர்ச்சியடைவதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அதே வேளை காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற பெயரில் தாராளமாக சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறும். வடக்கின் சுற்றுச் சூழல் மாசுபடும். நீர் உவராதலால் குடி நீர் கூடக் கிடையாத நிலை உருவாகும். ஒட்டு மொத்தத்தில் அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொள்ளப்படும் கடல் நகரம் அமைப்பதும், நகரத்துக்குள் கடல் புகும் நிலையை ஏற்படுத்துவதும் இந்த நாட்டின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இது தொடர்ப்பாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் விழிப்பாக இருக்கத் தவறினால் நாடே அழியும் ஆபத்தை தவிர்க்க முடியாது.
















