ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கறுப்பு உடை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கறுப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்வை செப்டம்பர் 25ல் தொடங்கும் ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரை அனுமதிக்க மறுத்த ராஜபக்சவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 26ம் தேதி நடந்த டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கியமான இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இனப்படுகொலை தீர்மானத்தில் நாம் வலியுறுத்தியிருந்தபடி ராஜபக்சவை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று நம் மத்திய அரசும் இதுவரை வலியுறுத்தவில்லை.
ஐ.நா. பொதுமன்றமும் ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பினைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றிய அதிபர் ராஜபக்ச, செப்டம்பர் 25ம் தேதி ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதைக் கண்டித்து உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இதற்காக, ஈழத் தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் வரும் 25ம் தேதி தத்தம் இல்லங்களில் கறுப்பு கொடி ஏற்றி வைப்பதோடு கறுப்பு உடை அணிதல், கறுப்பு சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் ராஜபக்சவுக்கு தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இன்றைய தினம் திமுக தலைவரின் கோபாலபுரம் வீடு தொடங்கி அனைத்து திமுகவினர் வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலின் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கறுப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கருணாநிதியின் முகநூல் முகப்புப் பக்கமும், கருப்பாக கட்சியளிக்கிறது. அந்த அளவிற்கு திமுகவினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
















