அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட ஐ போன்-6 கையாளும்போது பகுதியளவில் வளைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது ஐ போன் பாவனையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்சட்டைப் பையில் ஐ போனை இட்டு பாவனைக்காக மீண்டும் வெளியே எடுக்கும்போது இவ்வாறு வளைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐ போன்-6 அலுமினிய ஷெல்களால் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பலவீனமாக காணப்படுவதனாலேயே இவ்வாறான வளைவு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வளைவு ஏற்பட்டுள்ள ஐ போன் குறித்த படங்களை பாவனையாளர்கள் பலர் geek.com என்ற இணையதளத்தில் பதிவேற்றி வருவதுடன் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாவனையாளர்கள் இந்த ஐ போன் வளைதல் குறித்த தங்களது அதிருப்திகரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் இது குறித்து அப்பிள் நிறுவனத்திடம் இருந்து எவ்வித கருத்தும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்த விடயம் குறித்து விசாரணைகளை அப்பிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஐ போன் பாவனையாளர்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்பிள் நிறுவனத்தின் ஐ போன்-6 கடந்த வாரமே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















