கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களும் சாட்சியமளிக்க ஐ.நா ஆவன செய்ய வேண்டும்! ஐ.நாவில் கஜேந்திரகுமார்

kajendira-unபோரின் போதும் அதன் பின்னரும் வடக்கைப் போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட போதிலும் இங்கு, இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூர குற்றங்களுக்கு சமனான குற்றங்கள் 2007 இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டது.

அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நிலஅபகரிப்பு போலவே கிழக்கின் சம்பூரில் நிகழும் நிலஅபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும். எனவே, கிழக்கு மாகாணம் பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைக்குழு போதிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய் மூல அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை வருமாறு,

மனிதஉரிமைகள்பேரவை
27வதுஅமர்வு

ஐக்கியநாடுகளின் மனிதஉரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழிமூல அறிக்கைதொடர்பாக:-

மனிதஉரிமை ஆணையாளர்அலுவலகம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது. மனிதஉரிமை ஆணையகத்தின் 25/1 (A/HRC/25/1)தீர்மானம் சம்பந்தமான விரிவான பொருட்கோடலை / விளக்கத்தைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம்.

குறிப்பாக, மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவானது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவதற்கும் அதனை வலிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுப்பதாகக் குறிப்பிட்ட ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம்.

இந்த விசாரணைக்கு நேரடி சாட்சியங்களை வழங்கக்கூடிய மிகப்பெரும்பான்மையானோர் சிறிலங்காவின் வடக்குகிழக்கு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் என்பது மனிதஉரிமை ஆணையாளர் அறிந்ததே.

தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்கள் என்ற வகையில் இந்த விசாரனைக்கு தமது சாட்சியங்களை பதிவுசெய்ய வேண்டுமென்பதில் தமிழர்கள் பெரிதும் விருப்புக்கொண்டிருக்கிறார்கள்.

களத்தில் வாழுகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யாதவிடத்து, அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோஅமையாது .

ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது சாட்சியங்களை நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணிக் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவான பொறிமுறைகளை உறுப்புநாடுகள் முன்வைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போரின் போதும் அதன்பின்னரும் வடக்கைப் போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட போதிலும் இங்கு இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது.

உதார்ணமாக 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரகுற்றங்களுக்கு சமனான குற்றங்கள் 2007இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டது.

அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நிலஅபகரிப்பு போலவே கிழக்கின் சம்பூரில் நிகழும் நிலஅபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும்.

எனவே, கிழக்கு மாகாணம் பற்றியும் மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைக்குழு போதிய முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழர்கள், அவர்களது தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தினாலேயே தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை, மனித உரிமைகள் ஆணியாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடத்தவறியமையை நாங்கள் கவலையுடன் கவனத்தில்கொள்கிறோம்.

குறிப்பாக, (அந்தஅறிக்கையில்) மத சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதை கிற்ஸ்தவர்களும் முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாக பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை, தமிழர்கள் என குறிப்பிடுவதை தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை தருகிறது.

மனிதஉரிமைகள்ஆணையாளரது வாய்மொழு மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் பெரும்பான்மையான சம்பவங்கள், தமிழர்களின்/ இலங்கைத் தீவில் தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப் பொறிமுறையின் ஒரு பகுதியே ஆகும்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் புரிந்துகொள்ளல் இங்கு மிகவும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் விசாரணைகளைக் கொண்டு செல்லுமாறு மனிதஉரிமைகள்ஆணையாளர் அலுவகத்தை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

Tags: ,

Leave a Reply