மற்றும் ஒரு மாநாடாக இல்லாமல் மாறுபட்ட மாநாடாக “வெளியார் அதிகரிப்பும் – தமிழர் வாழ்வுரிமையும் மாநாடு” நடைபெறுகிறது.
பழகிப் போன பழைய பாதை, பழைய பயணம், பழைய சொற்கள், பழைய முழக்கங்கள் போன்றவற்றை மனம் எளிதில் ஏற்கிறது. புதிய இலக்கு – அதற்கான புதிய பாதை – புதிய பயணம் – புதிய முழக்கங்கள் போன்றவற்றை ஏற்பதற்கு இலட்சியப் பற்றும் சிந்தனைத் துணிவும் தேவைப்படுகின்றன.
எது இலட்சியம், எது இலட்சியம் போல் தோற்றம் தரும் போலி முழக்கம் என்று அடையாளம் காண ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. தனக்குள்ளேயே விவாதம் நடத்த வேண்டியிருக்கிறது. இது சற்றுக்கடினமான வேலையாக இருக்கிறது. ஆனால் பிறரைப் பின்பற்றிச் செல்வது எளிதாக இருக்கிறது; வழியமைத்து முன் செல்வது கடினமாக இருக்கிறது. ஆதிக்கம், அநீதி ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான முதல் தேவை மனிதர்கள் தங்களின் மனத்தடைகளிலிருந்து விடுதலை பெறுவதாகும்.
தமிழர்களைத் தட்டியெழுப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல் வரிகளைப் போல் சொல்வதெனில் “மனிதருள் நானும் ஓர் மனிதன்; மண்ணன்று; இமை திறந்தேன்; எழுந்தேன்; தோளை உயர்த்திச் சுடர் முகம் தூக்கினேன்; துணிச்சலாய் முன் செல்கிறேன்.” என்று ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் முழங்க வேண்டும்.
“பழைய சொற்களுக்குள் பதுங்கிக் கொள்ளும் பகட்டுச் சொல் பம்மாத்துக் காரர்களை அடையாளம் கண்டு கொண்டோம்; நாங்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வதற்கென்றே பிறந்த மந்தைகள் அல்ல; முந்தைய நாளில் முன்சென்று மனித குலத்திற்கே வழிகாட்டிய மூத்த தமிழினத்தின் இன்றைய எச்சங்கள்.” என்று உலகறிய முழங்க வேண்டும்.
அதற்கான அரங்கம்தான் 28.09.2014 அன்று சென்னையில் நடைபெறும் “வெளியார் அதிகரிப்பும் – தமிழர் வாழ்வுரிமையும் மாநாடு.”
பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் பத்தியம் பிடிப்பது போல், அரசியல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அழைக்கிறது – வாருங்கள் தமிழர்களே! குடும்பம் குடும்பமாக வாருங்கள்; குறிப்பாகப் பெண்கள் வருகை கூடுதலாக இருக்க வேண்டும். இது தமிழர்கள் அனைவர்க்குமான பொது மாநாடு!
1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழர் தாயாகமாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு இனியும் தமிழர் தாயகமாக நீடிக்குமா? என்ற வினா எழுந்துள்ளது. தமிழர்களின் தொழில், வணிகம், வேலை முதலியவற்றில் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் – வெளிநாட்டவரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழர்கள் அவர்களுக்குக் கீழே இரண்டாம் நிலையில், மூன்றாம் நிலையில் தொழில் – வணிகம் புரிகிறார்கள் – வேலை பார்க்கிறார்கள்.
அன்றாடம் வெள்ளம் போல் ஆயிரமாயிரமாய் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து குவிகிறார்கள் – குடியேறுகிறார்கள். இதனால் தமிழ் மக்களின் மக்கள் தொகைக்குச் சமமாக வெளிமாநிலத்தவர் மக்கள் தொகை பெருத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது நடந்து விட்டால் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்காது. கலப்பினங்களின் நிர்வாக மண்டலமாகத் தமிழ்நாடு மாறிவிடும். அதன் பின்னர் தமிழ்நாடு என்ற பெயர் கூட மாற்ற்ப்படலாம்.
இவற்றிக்கெல்லாம் என்ன தீர்வு? இந்தியாவில் மற்ற மாநிலங்களில் என்னென்ன தீர்வு கண்டுள்ளார்கள் என்று ஆய்வு செய்தோம். கார்நாடகத்தில் வெளிமாநிலத்தவர்கள் விளைநிலங்களை வாங்கத் தடைச்சட்டம் இருக்கிறது. காசுமீரில் வெளிமாநிலத்தவர் எந்தச் சொத்தும் வாங்க முடியாத படி தடைச்சட்டம் இருக்கிறது. இதே போன்ற தடைச்சட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கின்றன.
நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் குடியேற அந்தந்த மாநில அரசின் தனி அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. இதை உள்எல்லை நுழைவு அனுமதி (Inner Line Permit) என்று சட்டம் கூறுகிறது.
இவை போன்ற தற்காப்புச் சட்டங்கள் தமிழ்நாட்டிற்கும் வேண்டுமென்று நாம் கோருகிறோம்.
தமிழ்நாட்டில் வந்து குவியும் வெளிமாநிலத்தவர்க்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என்கிறோம். தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர் குடியேறத் தமிழக அரசின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும் சட்டமியற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் பிறமாநிலத்தவர்கள் சொத்து வாங்கத் தடைவிதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் 80 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டும்.
இவை உள்ளிட்ட இன்னும் சில தீர்மானங்களை இம்மாநாடு நிறைவேற்றவுள்ளது. அது மட்டுமின்றி, இப்பொழுது தொழில்-வணிகம்-வேலைவாய்ப்பு போன்றவற்றில் வெளியாரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நெருக்கடிகள் குறித்த கருத்தரங்கங்கள் நடக்கவுள்ளன. இவற்றில் அந்தந்த துறைச் சார்ந்த வல்லுநர்கள் பேச இருக்கிறார்கள். நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளையும், நீங்கள் கருதும் தீர்வுகளையும் எழுதி மாநாட்டில் தரலாம். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
எனவே இது தமிழர்களுக்கான பொது மாநாடு. வாருங்கள் தமிழர்களே!
தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
















