எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மிகவும் கனதியான நாட்கள் இவை. இன்னும் நெஞ்சிருந்து உதிரம் வடியும் நினைவுகளுக்குரிய தினங்கள் இவை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் ஆளுமைகள் இரண்டு இதே தினங்களில் விதையாகி போயின.
அதுவும் இரு வேறுபட்ட முறைகளில் அந்த விதைப்புகள்…ஒன்று ஆயுதங்கள் ஒப்படைக்கபட்டு இருந்த ஒரு அமைதிப் பொழுதில், சாத்வீகமான முறையில் விடுதலைக்கான எமது மக்களின் பெருவிருப்பை கோரிக்கைகளாக்கி நீரும் அருந்தாமல் உண்ணா நோன்பிருந்து…
இன்னொன்று தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் அத்தனை நீட்சிகளையும், வளர்ச்சியையும் கனவுகண்டு அதனை நனவாக்க தேசிய தலைவனுக்கு தோள்கொடுத்த ஒரு அற்புதம்..அதுவும் அமைதி பேச்சு காலத்தில்தான்..
இரண்டு விதைப்புகளும் நடந்தேறியது இரண்டு விதமான பத்தாண்டுகளில், இருவேறு நூற்றாண்டுகளில், ஒன்று இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் (1987) மற்றது 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (2001)..ஒன்று 80களின் இறுதியில் மற்றையது 2000களின் ஆரம்பத்தில்..
சங்கர் அண்ணா, திலீபன் இருவருமே தியாகத்தின் இரு உச்சங்கள். ஓய்வற்ற போராட்டத்தின் இரு உறுதி மலைகள்…அவர்களின் வாழ்வும் மரணமும் ஆயிரம் பாடங்களை எமக்கு சொல்லி தந்தபடியே காலகாலத்துக்கும் தொடர்ந்துவரும்…இரண்டு வீரர்களிலும் இருந்தது விடுதலைக்கான முறைமைகளை, வழிகளை, அதனை எவ்வாறு பெருமக்களின் அணிதிரட்டலுடன் முன் நகர்த்தலாம் என்பதையே எந்த நேரமும் சிந்தித்ததே அவர்களிடம் இருந்த ஒற்றுமை…..!
அதிலும் திலீபனை எடுத்துக் கொண்டால் அவனது மிகமுக்கியமான பலமே விடுதலைப் போராட்டத்தின் மீதும்,அதனை அடைவதற்கான பாதை தொடர்பாகவும்,அதனை வழிநடாத்தும் தலைமை மீதும் முழுமையான தெளிவும் நம்பிக்கையுடனும் இருந்ததே.
எந்த சந்தர்ப்பத்திலும் அவன் குழப்பமடைந்ததோ அசதி அடைந்ததோ கிடையாது..
இரண்டாவதாக, திலீபனுக்கு முன்பாக ஒரு பெரும் கடமையை அவனது ஆதர்ச தளபதியும் அவனுக்கு மிகவும் பிரியமானவருமான கிட்டு காட்டிவிட்டிருந்தார்.
களமாடுவதிலும், தாக்குதல்களில் முதன்நிலை தாக்கு நிலையில் நிலை கொண்டு நிற்பவனாக இருந்து போராடுவதே திலீபனுக்கு மிகமிக விருப்பமாக இருந்தாலும் காலத்தின் தேவை அவனை வேறு ஒரு நிலைக்கு மாற்றியது.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்றுணர்ந்த தலைமை திலீபனிடம் அரசியல் பொறுப்பை ஒப்படைத்தபோது அவன் முழுமனதுடனேயே ஏற்றுக்கொண்டான்.
இங்கே ஒரு பாடம் நம் எல்லோருக்கும்…20 வயதை சற்று தாண்டிய அந்த பருவத்தில் களமாடுவதும்,சக போராளிகளுடன் இணைந்து நிலைகொண்டு தாக்குதலுக்காக நிற்பதும் எத்துணை எழுச்சியையும், வீர உணர்வையும் தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வயதில் எல்லோரும் அதனையே விரும்புவதும் இயல்பானதுதான்.
ஆனாலும் நான் எதனை விரும்புகிறேன் என்பதல்ல இங்கு விடுதலைப் போராட்டத்தில் முக்கியம். விடுதலைப் போராட்டமும், அதன் தலைமையும் எதனை ஒப்படைக்கிறார்களோ அதுவே வரலாற்றின் கடமை என்றுணர்ந்து அதற்காகவே முழுமையான உழைப்பையும் தேவை ஏற்படின் அந்த துறைக்காகவே மரணிக்கவும்கூட தயாராக இருத்தலே அந்த பாடம்.
(இதனையே கிட்டு “எனக்கு என்ன வேலையை இயக்கம் தருகின்றதோ அதனை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பதே எனக்கான பணி.அமைப்பின் போராளிகளின் உடுப்புகளை துவைக்கும் வேலை தந்தால்கூட அதனை எவ்விதம் சிறப்பாக செய்வதென்றும்,எப்படி அழகாக மடித்து உடுப்புகளை வைப்பதென்றும் பார்ப்பேன்.’ என்று அழகாக கூறுவார்)
ஒரு முக்கியமான காலகட்டம் ஒன்றில் திலீபன் அரசியல்துறை பொறுப்பாளன் ஆகின்றான். பகுதியாக விடுவிக்கப்பட்ட தமிழீழ தாயகம், அந்த பகுதிக்குள் வாழும் மக்களுக்கான பாதுகாப்பு, வாழிட சுகாதாரம், கல்வி என்பனவற்றிலும் நீதி வழங்குவதிலும் இயக்கமே பொறுப்பெடுக்க வேண்டிய ஒரு பொழுதில் திலீபனின் செயற்பாடு தொடங்குகின்றது.
மக்களுக்கு புரியாமல் மூன்றாம் அகிலம், நவபாசிசம், நான்காம் அகிலம் என்று பிதற்றுவதே அரசியல் என்றும் அடுக்கு மொழியில் விளாசுவதும்தான் அரசியல் என்றும் இருந்த ஒரு பொழுதில் மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் மக்களின் மனதோடு ஒன்றிடும் மொழியில் சொன்னதே திலீபனை மக்கள் தங்களுள் ஒருவனாக நினைத்தற்கு காரணமாகும்.
மிகமிக அற்புதமாக ஒரு பம்பரம் போன்ற வேகத்துடன் தெருத்தெருவாக மக்களை அணிதிரட்டி அரசியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.
காலகாலமாக கற்பித்து வரப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளை பேணுவதும், கதைப்பதும்கூட ஒரு தேசக்குற்றம் என்ற நினைப்பை எல்லோர் மனங்களின் உள்ளேயும் நிறுவினான்.
போராளிகளின் தியாகங்களாலும் வீரம் செறிந்த அர்ப்பணங்களாலும் ஏற்படுத்தப்பட்ட இராணுவ வெற்றிகளை ஒரு அரசியல் மாற்றமாக செய்யும் ரசவாதம் தெரிந்த ஒரு முழுமையான போராளியாக அவன் உலாவந்தான்.
ஒரு சுதந்திர தேசத்துக்குரிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் கிட்டுவுக்கு பக்கதுணையாக நின்றவன் திலீபன்.
இறுதியாக அரசியல்ரீதியாக ஒரு அழுத்தம்,ஒரு பெரு மாயை ஏற்பட்டபோதும் அதனை நீக்குவதற்காக வேறு யாரையும் தேர்வு செய்வதைவிட திலீபன் தானாகவே முன்வந்து உண்ணாவிரதத்தில் அமர்கிறான்.
திலீபனை பற்றி தேசிய தலைவர் சொல்லும்போது “திலீபனின் மரணம் எமது மக்களின் இந்திய மாயையை கலைத்தது” என்று கூறுவார். அதுதான் முழு உண்மை. திலீபனின் மிகக்குறைந்த பட்ச கோரிக்கைகளும், அதற்காக அவன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததும், அதனைகூட நிறைவேற்ற முடியாத இந்திய ஆளும் வர்க்கமும் எமது மக்களின் “இந்தியா என்பது எமது காவல் தெய்வம்” என்ற கனவை கலைக்க உதவியது.
அந்த நினைப்பை கலைத்து உண்மையை புரியவைக்காமல் இந்திய படைகளுடன் ஒரு யுத்தம் தொடங்கி இருந்தால் நிச்சயமாக மிகப்பெரும் பின்னடைவையே அமைப்பு சந்தித்திருக்கும்.
தன் மரணத்தின் மூலம்கூட இன்னும் பெரிய உந்துதலை, உறுதியை இந்த போராட்டத்து, இந்த மக்களுக்கு தந்து போனதுதான் அவனது ஈகம்..
சங்கர் அண்ணாவை பொறுத்தவரையிலும் திலீபன் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டும் மக்களுக்கான விடுதலையை துரிதப்படுத்தும் கட்டமைப்புகளை படையக கட்டமைப்புகளை கட்டளைப் பீடத்தை சிங்கள தேசத்தின் இராணுவ பலத்துக்கு ஈடானதாக, அதனைவிட பலமானதாக கட்டி எழுப்புவதில் உழைத்த ஒருவர்.
சங்கர் அண்ணா அமைப்புக்கு வந்த காலகட்டம் ஒரு நெருப்பாற்று நீச்சல் போன்ற பொழுது.
1983ல் யூலை இனக்கொலைக்கு பின்னர் தமிழீழ இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியும், ஆயுதப் போராட்டம் மீதான அவர்களின் இணைவும் இந்திய வல்லாதிக்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துகின்றது. பயிற்சி தருவதாக ஆயுத அமைப்புகளுக்கு அழைப்பு வந்த காலம் அது.
அதனை ஏற்று இந்தியா சென்றால் இந்தியாவின் கட்டளைகள், ஊடுருவல்கள், தலையீடுகள் அமைப்புக்குள் வலிந்து வந்தே தீரும். பயிற்சிக்கு செல்லாது ஈழத்திலேயே நின்றால் ஒரிருவருடன், ஒரு பத்துபேருடன் இருக்கும் அமைப்புகளுக்கு எல்லாம் பயிற்சியும் கொடுத்து ஆயுதமும் கொடுத்து தமிழீழம் அனுப்பி உறுதியான போராட்ட சக்தியான விடுதலைப்புலிகளை அழித்துவிடுவார்கள்.
ஒருவகையில் பத்மவியூகம்தான். தெளிவுடன் உள்நுழைந்து சேதாரம் இன்றி தனித்தன்மையுடன் வெளியேறவும் வேண்டும். சென்றோம்..ஆனால் சேதாரம் இன்றி அதே விடுதலைப்புலிகளாக அங்கிருந்து வெளியேற பாடுபட்டவர்களில் சங்கர்அண்ணா முக்கிய ஆள்.
அதற்காகவே எந்தநேரமும் அண்ணையுடன் திரிந்தார் சங்கர் அண்ணா..வேறு வேறு இயக்கங்கள். தமிழீழ கனவுகளுடன் படகேறி அங்கே முழு இலங்கைக்குமானவர்களாக மாறியது போன்று எமது இயக்கத்தினுள்ளும் நடைபெறாது காத்தவர்களில் சங்கர் அண்ணா முக்கியமானவர்.
இரண்டாவதாக, தாம் பிச்சைபோன்று வழங்கும் ஆயுத- தொடர்பு வளங்களுடனேயே போராளிகள் இருக்கவேண்டும் என்ற இந்திய வல்லாதிக்க நினைப்பை பொய்யாக்கி,
எமக்கான வளங்களை நாமே தேடுவதற்கான ஏற்பாடுகளை தலைவர் திட்டமிட்டபோது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்திய அசாத்திய ஆற்றலாளன் கேணல் சங்கர் அண்ணா..அதற்காகவே சங்கர் அண்ணா இந்த அமைப்பின் முதன்முதலான புலனாய்வுபகுதி ஒன்றை கட்டியமைத்தார்.
தமிழீழ கடலைப் பொறுத்தவரையிலும் 83,84,85 பகுதிகளில் ஓட்டிகள் என்று அழைக்கப்படுபவர்களே விடுதலைப் புலிகளின் கடற்படகுகளை செலுத்துபவர்களாக இருந்தார்கள்.
தமிழீழ இலட்சியத்தின் மீதான பற்றுதலாலும், இயக்கத்தின் மீதானவாஞ்சையாலும் குடும்பவாழ்வினுள் இருந்தபடியே இந்த உயிர் ஆபத்தான கடல்பயணங்களை ஓட்டிகள் செய்தார்கள்.
ஆனால் இயக்கத்தின் வளர்ச்சியும், அதனூடு சிங்கள பேரினவாத கடற்படையின் வளர்ச்சியும் அதிகரித்தபோது இயக்கத்துக்கென்று தனியாக ஒரு கடற்படை,ஒரு கடல் அணி உருவாக்கப்பட வேண்டிய வரலாற்று தேவை உருவானபோது சங்கர் அண்ணாவே முன்னின்று கடற்புறாவின் உருவாக்கத்துக்கு உழைக்கிறார்.
இயக்கத்துக்கு வருவதற்கு முன்னர் ஏற்கனவே சங்கர் அண்ணா உலகம் முழுதும் கப்பல் மாலுமியாக (இயந்திர பொறியாளனாக) வேலை செய்த அனுபவம் அதற்கு பெரிதும் உதவியது.
அதனைப் போலவே விரிந்த பெருங்கடலில், வானூர்திகளின் உதவியுடனும் கடற்படையினர் செய்த எம் மக்கள் மீதான படுகொலைகளுக்கு பதிலடியாக முதலாவது கடற்கரும்புலி தாக்குதலை சங்கர் அண்ணாவே முன்னின்று நெறுத்திப்படுத்தினார்.
சிங்கள பேரினவாத படைகளின் பலத்துக்கு சவால்விடும் கட்டமைப்புகளை உருவாக்கி அதன்மூலமே எமது மக்களை காத்து கொள்ளலாம், எமது நிலத்தை காத்தும்-மீட்டும் கொள்ளலாம் என்று அனுபவத்தால் உணர்ந்ததாலேயே சங்கர் அண்ணா விமானப் படையை உருவாக்கினார்.
இந்த முயற்சிகளுக்கான அவரது பயணங்கள், தேடல்கள், தோல்விக்கு தோல்விக்கு பின் வெற்றி அளிக்கும்வரை செய்த முயற்சிகள் எமக்கு என்றைக்குமான பாடங்கள்.
இந்த இனத்தை அளவுகடந்து நேசித்த ஒரு மனிதன் அவர்.
சங்கர் அண்ணாவுக்கான பரிசோதனை சாலைகளும், திட்டமிடல் கட்டமைப்பும், தலைவருடன் தினசரி சந்திக்கும் வேலைகள் இருந்தாலும் சங்கர் அண்ணா அதனூடக கிடைக்கும் ஒரு சிறு இடைவெளிக்குள் மக்களை சந்தித்து அவர்களின் அன்றாட ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டபடியேதான் இருந்தார்.
நாளைய தன் தேசம் பசுமையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்ட ஆயுதப் போராளி அவர். அதனால்தான் தினமும் சிறுசிறு மரக்கன்றுகளை எங்காவது நட்டுவைத்தார்.
இன்று அவை கிளை பரப்பி விருட்சங்களாக நிற்கலாம். நாளை ஒரு சுதந்திர தேசம் மலரும்போது சங்கர் அண்ணாவின் நினைவாக அவை காற்றெறியும்.
நிச்சயமாக திலீபன், சங்கர் அண்ணா என்ற இந்த இருபெரும் ஆளுமைகளும் விடுதலைப் போராட்டத்தின் இருபெரும் வழிகாட்டிகளாக என்றென்றும் நிலைத்திருப்பர்.
ஒவ்வொரு பாதையும் மூடப்படும்போது மற்ற ஒரு பாதையை எப்படி திறப்பது என்றும் அதற்காக எப்படி முழுமையான அர்ப்பணத்துடன் உழைப்பது என்றும் திலீபனது வாழ்வும் சங்கர் அண்ணாவினது வாழ்வும் எப்போதும் சொல்லியபடியே இருக்கும்.
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
















