சம்பந்தனுக்கும் – விக்கிக்கும், விக்கிக்கும் – விக்கிக்கும் இரகசிய சந்திப்பு! நடந்தது என்ன?

sam-viki-vikiவரதராஜப்பெருமாளை முதலமைச்சராக கொண்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் செயலாளராக பணியாற்றிய கலாநிதி கே.விக்கினேஸ்வரனுக்கும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில், கடந்த 2010ம் வருடம் நாடாளுமன்றத்தேர்தல் காலப்பகுதியில், இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கலாநிதி கே.விக்கினேஸ்வரனே மனம் திறந்து கூறியுள்ளார்.

இராஜவரோதயத்தின் இராச”தந்திரம்”

குறித்த (2010ம் வருடம்) நாடாளுமன்ற தேர்தலில் கலாநிதி திருகோணமலையில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார். இது தனது வெற்றியை பாதிக்கும் என்பதை உணர்ந்த சம்பந்தன், கலாநிதியை அழைத்துப்பேசி “தேசியப்பட்டியல்” நாடாளுமன்ற பதவியை வழங்கி உறுப்பினராக்குவதாக வாக்குறுதியளித்து கலாநிதியை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்துள்ளார்.

கூடவே, இரா.சம்பந்தன் – கலாநிதி கே.விக்கினேஸ்வரன் எனும் இரண்டு மனிதர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் – கே.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பாக சித்திரித்தது மட்டுமல்லாமல், வாக்குறுதியளித்தவாறு “தேசியப்பட்டியல்” நாடாளுமன்ற பதவியை கலாநிதிக்கு வழங்காமலும் காலை வாரியுள்ளார்.

அவ்வாறு “தேசியப்பட்டியல்” ஊடாக நாடாளுமன்ற பதவி வழங்கப்பட்டிருந்தால், இன்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு பதிலாக கலாநிதி கே.விக்கினேஸ்வரனே அப்பதவியில் இருந்திருப்பார்.

மேலும் இந்தச்சந்திப்பு தொடர்பாக, அப்போது கூட்டமைப்பில் இருந்த அங்கத்துவ கட்சிகளுக்கு (ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ) எவ்வித தகவலும் தெரிந்திருக்கவில்லை.

வாரக்கணக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திடுவதற்கான நகலும் வழங்கப்பட்டிருந்த குறித்த சந்திப்பு தொடர்பாக, அங்கத்துவ கட்சிகளிடையே சம்பந்தன் எதுவித கருத்துப்பரிமாற்றமும் செய்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சம் இலங்கை தமிழரசுக்கட்சியுடனாவது சம்பந்தன் விவாதித்திருப்பாரா? என்பதும் ஐயமே!

விக்கிக்கும் விக்கிக்கும் இரகசிய சந்திப்பு! நடந்தது என்ன?

வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முன்னாள் நீதியரசர் விக்கிக்கும், முன்னாள் வ.கி.மா.சபை செயலாளர் விக்கிக்கும் இடையே கொழும்பில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

“வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைக்கு முன்பு செயலாளராக இருந்த ஒருவர் இப்பவும் உயிரோடு இருக்கிறார். அவருக்கும் உங்கட (விக்கினேஸ்வரன்) பெயர் தான். அவர நீங்க சந்திச்சு கதைத்தால் மாகாணசபையை முன்கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள், அநுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.” என்று கூட்டமைப்பின் நலன்விரும்பிகள் சிலர் கேட்டுக்கொண்டதையடுத்தே நீதியரசர் விக்கிக்கும், கலாநிதி விக்கிக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆயுத குழுக்கள் அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள்!

அந்தச்சந்திப்பில் நீதியரசர் விக்கி,

“ஆயுத போராட்டத்துக்குள்ளால வந்தவர்கள் எவருக்கும் மாகாண அமைச்சுப்பதவிகளை தான் வழங்கப்போவதில்லை என்றும், அவர்கள் அரசுக்கு எதிராக (பொலிஸ், இராணுவம், கடல்படை, ஊர்காவல்படைகளுக்கு எதிராக) மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், இவர்களை தன்னோடு வைத்துக்கொண்டு தான் எந்த முகத்தோடு சென்று அரசோடு பேசுவது என்றும், இனிவரும் காலங்களில் இலங்கை அரசோடும், சர்வதேச சமுகத்தோடும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு மென்போக்கு சுபாவத்தை உடையவர்களையே பிரதிநிதிகளாக கொண்டுவர வேண்டும் என்றும், தான் வழங்கும் அமைச்சுப்பதவிகள் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும்” கலாநிதி விக்கியிடம் கூறியதாக அறிய கிடைக்கின்றது.

கலாநிதி விக்கியிடம் தான் கூறியதை நடைமுறைப்படுத்திய நீதியரசர் விக்கி,

மாகாணசபையை கொண்டிழுக்கவும், வரும் இடர்களை களையவும் கலாநிதி விக்கி கூறிய ஆலோசனைகள், சட்ட நுணுக்கங்கள் பலவற்றில் ஒன்றையேனும் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. செயல்படுத்தியிருந்தால், ஒருவருடத்தை கடந்தும் நொண்டிக்கொண்டு, மூச்சிழுத்தவாறு இருப்பதை விடுத்துவிட்டு, வடமாகாணசபை ஊடாக சட்ட ரீதியாக நல்ல பல விடையங்களை சாதித்திருக்க முடியும்.

“ஆளுநர் தடை போடுகிறார். செயலாளர் முட்டுக்கட்டையாக நிற்கிறார்” என்றெல்லாம் புலம்பித்தவிப்பதற்கான தேவையே இருந்திருக்காது.

-(இ)ராஜபறவை-

Tags: ,

Leave a Reply