தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டமை அவரின் அரசியல் வாழ்க்கையில் நிரந்தரமான பின்னடைவு என்ற கருத்தை அரசியல் அவதானிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் அவ்வாறான பின்னடைவுகளை தாண்டி மீண்டும் ஆட்சிக்கு வந்தவர் என்ற அடிப்படையில் மீண்டும் ஜெயலலிதாவினால் முன்னுக்கு வரமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அனுபவம் மிக்க ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான சோ ராமசாமி, நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு தற்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிகளவான அனுதாபத்தை கொண்டுவந்துள்ளது. உரிய சட்ட ஆலோசனைகள் உதவிகள் கிடைக்குமானால் அவர் மீண்டும் வெளியில் வரலாம் என்று சோ ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டமையானது அவருக்கு அல்ல. தமிழக அரசுக்கே பின்னடைவை கொண்டு வரும் என்றும் சோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அபிவிருத்தி கற்கை நிறுவகத்தின் பேராசிரியர் ஏ ஆர் வெங்கடாசலபதி இது குறித்து கூறுகையில்,
ஜெயலலிதாவின் எதிர்காலம் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று. எனினும் மேன்முறையீடுகள் உயர்நீதிமன்றங்களே தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருக்கின்ற போது அவரால் ரிமோட் கொன்ரோல் மூலம் கட்சியையும் நிர்வாகத்தையும் சில மாதங்களுக்கு நடத்திச்செல்ல முடியும்.
எனினும் தேர்தல் ஒன்றை அவரால் ரிமோட் கொன்ரோலை கொண்டு செயற்படுத்த முடியாது என்று வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் இந்த வெற்றிடத்தை பாரதீய ஜனதாக் கட்சி தமது அரசியல் தக்கவைத்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெங்கடாசலபதியின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள சமூகவியலாளர் பி மணிகண்டன், பாரதீய ஜனதாக்கட்சி மாத்திரமல்ல ஏனைய கட்சிகளும் தமிழகத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கும் என்று கூறியுள்ளார்.
எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலுவான அமைப்பினால் தமது எதிராளிகளுக்கு சவால்களை விடுக்க முடியும் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
















