குஜராத் கலவர வழக்கு தொடர்பான நியூயார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் சம்மனை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குபவருக்கு 10,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து நியூயார்க்கைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் கூறுகையில், “அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள நரேந்திர மோடி, இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்னும் 2 நாள்கள் கலந்துகொள்ள உள்ளார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பான நீதிமன்றத்தின் சம்மனை அவரிடம் அளிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த அமெரிக்க நீதித்துறை மையம் (ஏஜேசி) என்ற தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது’ என்றார்.
இதற்கிடையே, மோடியிடம் சம்மனை வழங்குவதற்காக ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் ஏஜேசி அமைப்பு தொடங்கியுள்ளது.
நியூயார்க் மாகாண சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அருகில் 10 அடி தூரத்திலிருந்து அவர் மீது சம்மனை வீசி எறிந்தால், அது அவரிடம் வழங்கியதாக கருதப்படும் என்று ஏஜேசி அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வளையத்தில் மோடி: இந்நிலையில், “5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளார். அவரிடம் யாரும் சம்மன் வழங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று இந்தியா தெரித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக, அமெரிக்க நீதித்துறை மையம் (ஏஜேசி) என்ற மனித உரிமைகள் அமைப்பும், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி இருவரும் தொடர்ந்துள்ள வழக்கில், நியூயார்க் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
















