சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருப்பதை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக தற்போதைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
18 ஆண்டு காலமாக நடந்து வந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் பறிபோய்விட்டது. தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு அவரல் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்றும் பெங்களூர் உயர்நீதிமன்றமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ தீர்ப்பு அளித்தால் மட்டுமே அவர் மீண்டும் முதல்வராக முடியும்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பிக்கள், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்., அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே அதிமுகவின் சட்டசபை குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து புதிய முதல்வர் தேர்வுக்கான கடிதத்தைக் கொடுக்கிறது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார். கடந்த 2001-2002ஆம் ஆண்டு காலத்தில் இடைக்கால முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















