வவுனியா கல்நாட்டியகுளம் கிராமம் ஆனது மீள்குடியேற்றம் செய்யப்படாமையால் அக் கிராம மக்கள் வேறு பகுதிகளில் அவலங்களுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் இறுதி தமிழ் எல்லைக் கிராமமான கல்நாட்டியகுளம் கிராமம் ஆனது மீள்குடியேற்றம் செய்யப்படாமையால் அழிவடையும் நிலையில் உள்ளது. வவுனியா மாவட்டதின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எல்லைக் கிராமமான இக் கிராமம் களுகுணாமடு, அழகல்ல உள்ளிட்ட சிங்கள கிராமங்களுக்கு அண்மையில் உள்ளது.
சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த இக் கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட 70 வரையான குடும்பங்கள் வசித்து வந்தனர். 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களால் இவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டனர். அதிலும் தப்பியொட்டி இருந்த சில குடும்பங்கள் 1983 ஆம் ஆண்டு கலவரத்தால் வெளியேற்றப்பட்டனர்.
இன்று யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகின்ற போதும் இப் பிரதேச மக்கள் குடியேற்றப்படவில்லை. மின்சாரம், வீட்டுத்திட்டம், மலசலகூடம் என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இம் மக்கள் அங்கு சென்று குடியேறவில்லை.
தமக்கான விவசாய நிலங்கள் அங்குள்ளன. நாம் இன்று வேறு வேறு பிரதேசங்களில் பரந்து வாழ்கின்றோம் எமது தேவைகளையும் கருத்தில் கொண்டு அவற்றை செய்து தந்து மீள்குடியேற்ற வேண்டும். நாம் எமது நிலத்தில் வாழ தயாராகவே உள்ளோம் எனவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
















