குமரிக்குளத்தின் கலிங்கு நீர் பாயும் பள்ளத்துக்குள் அமையப்பெற்றுவரும் தொழில்பயிற்சி நிலையம். மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் முறைகேடு!

mullai-kumari1முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட பாண்டியன்குளம் செல்வபுரம் கிராமத்தில் பனை தென்னை வள அபிவிருத்திச்சங்கத்தின் தொழில் பயிற்சி நிலையம், முப்பது இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

செல்வபுரம் கிராமத்தில் பொதுத்தேவைக்கென்று எட்டு ஏக்கர்களுக்கு மேல்பட்ட சமதரை மற்றும் மேட்டு நிலக்காணிகள் உள்ளநிலையில், குறித்த தொழில் பயிற்சி நிலையம் வவுனிக்குளத்தின் பிரதான வாய்க்காலுடன் இணைந்துள்ள குமரிக்குளத்தின் கலிங்கு நீர் பாயும் பள்ளத்துக்குள் அமைக்கப்பட்டு வருவது தொடர்பில், அப்பகுதி மக்கள் ஆச்சரியமும், விசனமும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கனமழைக்காலங்களில் குளங்கள் நிறைந்து நீர் பெருக்கெடுத்து ஓடும் சந்தர்ப்பங்களில், குறித்த தொழில் பயிற்சி நிலையம், வெள்ளத்தில் மூழ்கும் அன்றி, சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிடுகின்றனர்.

மேலும் நீண்ட கால இலக்குகளை நோக்கமாகக்கொண்ட நிரந்தர அபிவிருத்தி திட்டத்தில் கட்டட அமைப்புக்கு பொருத்தமற்ற தரைப்பகுதியும், மக்கள் புழக்கமற்ற சூழலும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, பல்வேறு சந்தேகங்களை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கட்டடத்துக்கான ஒப்பந்த கேள்வி கோரலை பகிரங்கப்படுத்தாமல், தனிப்பட்ட நட்பு ரீதியிலான ஒப்பந்தகாரருக்கு வழங்கியுள்ள மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிருந்தாகரன், மறைமுகமாக அவரே அந்த ஒப்பந்தத்தை ஏற்று செயல்படுத்துவதையும், பாரிய முறைகேடுகளுடன் தொழில் பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருவதையும் மக்கள் உறுதிசெய்துள்ளனர்.

சிறு கைத்தொழில்கள், வணிகத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுவரும் குறித்த நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் (கடந்த மாதம்), மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிருந்தாகரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) முல்லை மாவட்ட அமைப்பாளர் அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், மற்றும் பனை தென்னை வள அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

நிலையத்துக்கான கட்டடத்தை அமைப்பதற்கு, மாந்தை கிழக்கு பிரதேசசபையின் அனுமதி பெறப்படவில்லை என்றும் தவிசாளரால் குற்றம் தெரிவிக்கப்படுகின்றது.

-கழுகுகண்-

Tags: ,

Leave a Reply