மூளையில் கட்டி உண்டானதால் உயிரிழந்த 3வயதுச் சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 5 உயிர்கள் காப்பாற்றாப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பது:
லியு ஜிங்யாவோ என்ற 3வயது சிறுமியின் நடை இயல்பாக இல்லாததால் அவரது பெற்றோர்கள் சீனாவில் உள்ள பல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தனர். அந்த சிறுமிக்கு பலவகையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உயர் சிகிச்சை அளித்த போதும் அவர் குணமடையவில்லை. இந்நிலையில் அவரது மூளையில் கட்டி உருவாகியிருப்பது இவ்வருட ஆரம்பத்தில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். சில நாட்களில் அந்த சிறுமி படுத்த படுக்கையானர்.
லியு ஜிங்யாவோ உயிர் பிழைக்க முடியாது என்பது உறுதியானதும் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பது என பெற்றோர்கள் முடிவெடுத்தனர். இது குறித்து லியுவின் கருத்தை அவர்கள் கேட்டபோது, தானம் என்ற சொல்லுக்கு அந்த குழந்தைக்கு அர்த்தமே தெரியவில்லை.
“தானம்’ என்ற சொல்லை அந்த குழந்தையால் புரிந்து கொள்ள முடியாததால் அவரது தந்தை தனது குழந்தையிடம், “உனது உடலிலிருந்து சில பகுதிகளை எடுத்து பிறருக்கு கொடுத்து, அவர்களைக் காப்பாற்ற உதவி செய்வாயா’ என்று கேட்டார்.
அதற்கு குழந்தை லியு சிறிதும் மறுப்பின்றி சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், கிழக்கு சீனா, ஜியாங்சி மாகாணத்தில் உள்ள பொது மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி அச்சிறுமியின் உயிர் பிரிந்தது.
உடனடியாக, அவரது உறுப்புகளை வேறு சிலருக்குப் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை ஐந்து நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இவர்களது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூன்று வயது சிறுமி என்பதால் அவருடைய உறுப்புகள் மிகச் சிறியதாக இருந்தன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“ஐந்து பேர் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள நீதான் உலகின் மிக அழகிய இளவரசி’ என அவரது தந்தை கூறியுள்ளார்
















