ஜெயலலிதாவுக்கு தார்மீகமாக எந்த உதவியும் செய்ய தயார். காங்கிரஸ் எம்.பி. அதிரடி அறிவிப்பு.

jayalalitha-pudhuchery-mp-kannanசொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா கொடுத்த தீர்ப்பினால் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்களிடையே பெரும் அனுதாபமும், ஆதரவும் அதிகரித்திருப்பதாக புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு எந்த நேரத்திலும் என்னுடைய தார்மீக ஆதரவும் உதவியும் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான ப.கண்ணன் இன்று மாலை புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நீதிமன்றத்தில் குன்ஹா அளித்த இந்த தீர்ப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக ஒரு சிறிய சறுக்கலாக இருக்கலாம். ஆனால் இந்தத் தீர்ப்பினால் பொதுமக்களிடையே அனுதாபமும், ஆதரவும் அதிகரித்திருக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அ.தி.மு.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன். ஏனென்றால் அ.தி.மு.க. தொண்டர்களின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிரிகளுக்குத்தான் லாபமாக அமையும். அதனால் பொறுமை காக்க வேண்டும். பொதுமக்களிடையே ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தவர்கள் விரைவில் பெரிய ஏமாற்றத்தை அடைவார்கள். அவருக்கு எப்போதும் என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு. தேவைப்பட்டால் அவரை எங்கு வேண்டுமானாலும் சென்று சந்திப்பேன்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி ஒருவர், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இவ்வாறு பேசியிருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply