வவுனியா, மகாறம்பைக்குளம், தாஸ்நகர் பகுதியில் வீதியால் சென்ற பெண்களுடன் வாய் சேட்டைகளில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் இடம்பெற்ற வாள்வெட்டில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (28) மாலை வவுனியா, மாறம்பைக்குளம், தாஸ்நகர் பகுதியில் வீதியால் சென்ற பெண்கள் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் வாய்சேட்டை செய்துள்ளனர்.
இதனையறிந்த பெண்களின் சகோதரர்களும் நண்பர்களும் குறித்த இளைஞர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு வாள்வெட்டாக மாறியது. இதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு சிலரை தேடி வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
















