ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பரபரப்பு பின்னணி என்ன?

jayalalitha-new-1-600ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க ‘அரசு வக்கீல்’ குறித்த குழப்பமே பின்னணி காரணமாகும். ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பெங்களூரிலுள்ள கர்நாடக ஹைகோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது ராம் ஜெத்மலானி ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக அரசு வக்கீலாக பணியாற்றிய பவானிசிங், மீண்டும் அரசு தரப்பில் ஆஜராக வந்திருந்தார்.

ஆனால் நீதிபதி ரத்தினகலாவோ, பவானிசிங்கை, அரசு வக்கீலாக கருதுவதில் குழப்பம் இருப்பதாக அதிரடியாக தெரிவித்துவிட்டார். ஏனெனில் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே பவானிசிங் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அந்த வழக்கு கடந்த சனிக்கிழமையோடு முடிந்துவிட்டது. எனவே பவானிசிங்கின் பதவிக்காலம் அத்தோடு நிறைவடைந்துவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்ற வழக்கோடு பவானிசிங்கின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல் யார் என்பதை இன்னும் கர்நாடக அரசு தீர்மானிக்கவில்லை. எனவே அரசு வக்கீல் யார் என்பதை தீர்மானித்து சொல்ல வேண்டும் என்று ஹைகோர்ட் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6ம்தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ரத்தினகலா. இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கர்நாடக அரசு, ஹைகோர்ட் தலைமை நீதிபதியுடன் இணைந்து ஆலோசனை நடத்தி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு யாரை அரசு வக்கீலாக நியமிப்பது என்பதை அறிவிக்க வேண்டும்.

கர்நாடக அரசு நினைத்தால் பவானி சிங்கையே அரசு தரப்பு வக்கீலாக தொடரச் செய்ய முடியும். அல்லது புதிதாக மூத்த வக்கீல் யாரையாவது கூட நியமிக்க முடியும். கர்நாடக அரசின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். இதில் வினோதம் என்னவென்றால், வழக்கில் ஆஜராக சென்ற பவானிசிங்கும் தனது பதவிக்காலம் முடிந்துவிட்டதால், இனிமேல் இதில் ஆஜராக கூடாது என்ற கோணத்தில் யோசிக்கவில்லை. கர்நாடக அரசு தரப்பிலும், ஜெயலலிதா தரப்பிலும் கூட இதுகுறித்த முன்யோசனை இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் நீதிபதி இந்த பாயிண்ட்டை சரியாக கேட்டு, கோர்ட்டை ஒரு நிமிடம் திக்குமுக்காட செய்துவிட்டார். இப்போதுதான் இரு தரப்புமே அரசு வக்கீல் குறித்த யோசனையை தொடங்கியுள்ளது. இந்த குழப்பத்தால், ஜெயலலிதா சிறையில் இருப்பது சரியில்லை எனவே அவருக்கு ஜாமீன் வேண்டும் என்று ஜெத்மலானி வாதிட்டு பார்த்தார்.ஆனால் நீதிபதி ரத்தினகலாவோ, அப்படி அவசரமாக ஜாமீன் வேண்டும் என்றால், ஹைகோர்ட் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.

Tags: , ,

Leave a Reply