பல்லாயிரம் கோடிகளுக்கும் விலை போகாத குன்ஹா!

michael-cunhaவரலாற்றில் வெகு அரிதாகவே துணிச்சலான நேர்மையான மனிதர்கள் பிறக்கிறார்கள். அதுவும், ஊழல் புரையோடிப் போயிருக்கும், சமீபத்திய காலங்களில், நேர்மையான மனிதர்கள் வெகு வெகு அரிது.

மைக்கேல் குன்ஹா 500 கோடியோ, அல்லது 1000 கோடியோ கேட்டிருந்தால், அள்ளிக் கொடுத்திருப்பார் ஜெயலலிதா. 1991-1996 வாக்கில் மட்டும், ஜெயலலிதா சம்பாதித்ததாக சொல்லப்பட்ட தொகை 5000 கோடி. அதற்குப் பிறகு, 2001-2006 மற்றும் 2011 -2014.

ஆனால் ஒரு நீதிபதியாக தனது பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார் குன்ஹா.

அதிமுக அடிமைகள், குன்ஹாவை, கன்னடி வெறியர் என்றும், காவிரி விவகாரத்துக்காக அவர் ஜெயலலிதாவை பழிவாங்கி விட்டார் என்றும் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த பொய்ச் செய்தி பரப்பலில், சில முக்கிய பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

காவிரி ஆறுக்கும் பெங்களுருக்கும் என்ன சம்பந்தம். கன்னட மக்களின் தன்மையையும், பெங்ளுருவையும் பற்றி அறிந்தவர்களுக்கு, வாட்டாள் நாகராஜைத் தவிர, காவிரியைப் பற்றி பேச, கர்நாடக மாநிலத்தில் ஆட்களே கிடையாது என்பது நன்றாகத் தெரியும்.

அதுவும் குன்ஹா, எதற்காக காவிரி பற்றி கவலைப்படப் போகிறார் ? இந்த வழக்கால், குன்ஹா சந்தித்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. குன்ஹா நியமிக்கப்பட்ட உடன், அதிமுக அடிமை வழக்கறிஞர்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்தனை செகன்ஸ் நீதிபதிகளையும், ஒருவர் விடாமல் சந்தித்து, குன்ஹா சட்டம் எங்கே படித்தார், அவரோடு படித்தவர்கள் யார், எங்கே நீதிபதி பயிற்சி எடுத்தார், யார் அவரது நண்பர்கள், எந்த சர்ச்சுக்கு செல்கிறார், அவர் மனைவியின் உறவினர்கள் யார், என்று துருவி துருவி விசாரித்தனர். விசாரணையின் முடிவில், குன்ஹாவை வளைக்கவே முடியாது என்று அறிந்த பிறகுதான், குன்ஹாவை அவமானப்படுத்தி, எரிச்சலூட்டி, அவராகவே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார் என்று அடுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆயிரம் கோடிகளை உதாசீனப்படுத்தி, நீதியை நிலைநாட்டி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் குன்ஹா. நான் குன்ஹாவை மகாத்மா காந்தியோடு ஒப்பிடுவது கூட, தவறல்ல என்றே கருதுகிறேன்.

அரிதிலும், அரிதாக தோன்றும் குன்ஹா போன்ற மாணிக்கங்கள் தோன்றுவார்கள். இந்த மாணிக்கங்களை, இழிவு படுத்தி காரணங்களை கண்டுபிடித்து, அவதூறு பேசினோம் என்றால், நம் சமுதாயம் நாசமாகப் போய் விடும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

– சவுக்கு

Tags: ,

Leave a Reply