வெள்ளைமாளிகையில் கத்தி, லிப்டில் துப்பாக்கி: ஒபாமா உயிருக்கு குறியா?

obamaவெள்ளை மாளிகையில் கத்தியுடன் ஒரு ஆசாமி புகுந்த சம்பவம் தொடர்பாக, ஒபாமாவின் பாதுகாப்பு படை தலைவரிடம் எம்.பி.க்கள் குழு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.

வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ஆசாமி

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் வசித்து வரும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாப்பை ‘சீக்ரட் சர்வீஸ்’ என்னும் ரகசிய பணி படையினர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி வெள்ளை மாளிகையினுள் ஒரு மர்ம ஆசாமி வேலி தாண்டி குதித்து விட்டார். அவர் அங்கு திறந்து கிடந்த ‘ஈஸ்ட் ரூம்’ என்று அழைக்கப்படக்கூடிய முக்கிய அறைக்குள் நுழைந்து விட்டார். இந்த அறைதான் வரவேற்பறையாக, பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறையாக பயன்படுத்தப்படுகிறது. அங்கு அவரை ரகசிய பணி படையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் பெயர் உமர் கான்ஜலெஜ் (வயது 42) என தெரிய வந்தது. முதலில் அவரிடம் ஆயுதம் ஏதுமில்லை என கூறப்பட்டது. ஆனால் அவர் வெள்ளை மாளிகைக்குள் குதித்தபோது கையில் கத்தி இருந்ததாக பின்னர் தகவல் வெளியானது.

எம்.பி.க்கள் குழு விசாரணை

இது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பில் கேள்விக்குறியை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக ரகசிய பணி படையினரின் தலைவர் ஜூலியா பியர்சனிடம் அமெரிக்க எம்.பி.க்கள் குழு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. விசாரணைக் குழுவில் ஆளும் ஜனநாயகக்கட்சி, எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த விசாரணையின்போது, ஜனாதிபதி ஒபாமாவின் பாதுகாப்பில் தவறுகள் நடந்து விட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த தவறை ஏஜெண்டுகளும், அதிகாரிகளும் செய்திருப்பதாக அவர் கூறினார்.

பொறுப்பு ஏற்றார்

ஜனாதிபதி ஒபாமா, அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பில் ரகசிய பணி படையினரிடம் நம்பிக்கை இழந்து விட்டதாக எம்.பி.க்கள் கூறினர்.

இருப்பினும் நடந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஜூலியா பியர்சன் இறுதியில், ‘‘இது குறித்து முழுமையான உள் விசாரணை நடத்தப்படும்’’ என உறுதி அளித்தார். இது எம்.பி.க்கள் குழுவுக்கு திருப்தி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மற்றொரு சம்பவம்

ஜூலியா பியர்சனிடம் எம்.பி.க்கள் குழு விசாரணை நடத்திய சில மணி நேரத்தில், ஜனாதிபதி ஒபாமாவுடன் துப்பாக்கி வைத்திருந்த ஒரு நபர் லிப்ட்டில் (மின் ஏணி) பயணம் செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லாண்டாவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துக்கு ஒபாமா சென்றிருந்தபோது, அவருடன் லிப்ட்டில் துப்பாக்கியுடன் ஒரு ஆசாமி சென்றிருக்கிறார். ஜனாதிபதியுடன் ரகசிய பணி படையினர் மட்டுமே துப்பாக்கி ஏந்திச் செல்ல அனுமதி உண்டு என்ற நிலையில், மற்றொரு நபர் துப்பாக்கியுடன் லிப்ட்டில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லிப்ட் வீடியோ பதிவினை ஆராய்ந்ததில் அந்த நபர், ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் என்பதும், இப்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply