ரஷ்யாவில் உள்ள ரயில் ஒன்றின் கதவில் ஒரு பெண்ணின் தலை மட்டும் சிக்கிக்கொண்டவாறே அவர் மூன்று மைல்கள் பயணம் செய்துள்ளார். இதை பார்த்த பல பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகேயுள்ள Dmitrovskaya என்ற ரயில் நிலையத்தில் 61 வயது Ilona Shubina என்ற முதிய பெண் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோமெட்டிக் கதவு பூட்டிக்கொண்டது. இதில் அந்த பெண்ணின் தலைமட்டும் சிக்கிக்கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும் ரயிலின் உள்ளே இருந்தது. இந்நிலையில் ரயிலும் உடனே கிளம்பிவிட்டது.
தலை சிக்கிக்கொண்ட பெண்ணை சக பயணிகள் யாரும் கவனிக்கவில்லை. அந்த ரயில் பெட்டியில் ரயில்வே அதிகாரிகளும் யாரும் இல்லாததால் அடுத்த ஸ்டேஷன் வரும் வரை அவர் தலை வெளியே நீட்டிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் இக்கட்டான நிலையை அடுத்த ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே ரயில்வே அதிகாரிகளிடம் கூறி அந்த பெண்ணை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் Ilona Shubina அவர்களுக்கு கழுத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
















